தங்கம் வென்ற மனு பாகர்- சவுரப் ஜோடி...!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்தரி ஜோடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

டில்லியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றில்,

இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்தரி ஜோடி 778.28 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது.

மற்றொரு இந்திய ஜோடியான ஹீனா சித்து, அபிஷேக் வர்மா ஜோடி 770.21 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய மனு பாகர், சவுரப் சவுத்தரி ஜோடி 483.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.

இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம். ஏற்கனவே அபுர்வி சண்டேலா (பெண்கள் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ தனிநபர்),

சவுரப் சவுத்தரி (ஆண்கள் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர்) ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றிருந்தனர்.

வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே சீனா (477.7 புள்ளி), தென் கொரிய (418.8) ஜோடிகள் கைப்பற்றின.

அடுத்து நடந்த 10 மீ., ‘ஏர் ரைபிள்’ கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அஞ்சும், ரவி குமார் ஜோடி 836.3 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்தது.

மற்றொரு இந்திய ஜோடியான அபுர்வி சண்டேலா, தீபக் குமார் ஜோடி 831.0 புள்ளிகளுடன் 25வது இடம் பிடித்தது.

இதனையடுத்து இந்திய ஜோடி பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறின.

இம்முறை தலா 3 தங்கம் வென்ற ஹங்கேரி, இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன.

மூன்றாவது இடத்தை சீனா (ஒரு தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) பிடித்தது.