அபிநந்தனை வரவேற்க தயாராகும் வாகா..!

பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்படும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை தாக்குதவதற்காக சென்ற இந்தியாவின் மிக் 21 விமானம் பாகிஸ்தான், படைகள் சுட்டதில் சேதமடைந்தது.

இதனையடுத்து பாராசூட் மூலம் தப்பிக்க முயன்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.  இவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூர் அழைத்து வரப்படும் அபிநந்தன், வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

அவரை வரவேற்க வாகா எல்லையில் பொதுமக்கள் மேள தாள முழக்கத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.  வாகா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அபிநந்தன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
வாகா செல்வதற்காக அம்ரீந்தர் சிங், பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபிநந்தனை வரவேற்க அவரது குடும்பத்தினரும் வாகா செல்ல உள்ளனர்.