தமிழக மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்..!

தமிழக மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்..!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன.

இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து 314 விசைப்படகுகளில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஸ்ரீராம் (வயது 18), ரவி (52) உள்பட 22 பேர்,

நேற்று முன்தினம் இரவு சுமார் 18 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதேபகுதியில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கணிஸ்டன் (45), பாண்டி (40) உள்பட 19 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கு சொந்தமான விசைப்படகில் மோதினார்கள்.

இதில் அந்த விசைப்படகு சேதமடைந்தது. இதில் விசைப்படகில் இருந்த பாலமுருகன், செல்லமுருகன் ஆகிய இருவரும் கடலுக்குள் தவறி விழுந்தனர்.

இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை வீரர் ஒருவரும் கடலுக்குள் தவறி விழுந்தார்.

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடலுக்குள் விழுந்த 2 மீனவர்களையும் மீட்டு,

சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள காங்கேசன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் மீட்டு, படகில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

இதைப்பார்த்த இலங்கை கடற்படையினர், அந்த வீரரை தமிழக மீனவர்கள் சிறைபிடித்து செல்வதாக தவறாக நினைத்துக்கொண்டு,

அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 39 மீனவர்களையும் 10 விசைப் படகுகளையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துச் சென்றனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திற்கு அழைத்து வருவதாக தகவல் பரவியது.

இதற்கிடையில் தமிழக மீனவர்கள் மீட்ட இலங்கை கடற்படை வீரரை, நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.

ஆனால் சிறைபிடித்து சென்ற 41 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து, இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, ராமேசுவரம் அருகே மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகையும்,

அதில் இருந்த பாண்டி, பஞ்சு, வடிவேல், ராஜலிங்கம் ஆகிய 4 மீனவர்களையும்,

அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த கிருஷ்ணன், கண்ணன், குமார், பால்சாமி ஆகிய 4 மீனவர்களையும்,

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஆக மொத்தம் தமிழக மீனவர்கள் 49 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து,  கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள்,

இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையிடம் இருந்து தங்களை பாதுகாக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள்: மித்ரா