திண்டுக்கல்,

இந்தியாவில், முதன்மையான முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி போட்டி 1934-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 86-வது ரஞ்சி போட்டி இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. சண்டிகார் அணி முதல்முறையாக ரஞ்சியில் கால்பதிக்கிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

முதல் நாளில் 18 ஆட்டங்கள் நடக்கிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் கருண் நாயர் தலைமையிலான பலம் வாய்ந்த கர்நாடகாவை (4 நாள் ஆட்டம்) சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல் நத்தத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

41 முறை சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி பரோடாவை (பி பிரிவு) வதோதராவில் எதிர்கொள்கிறது. புதுச்சேரி அணி பீகாருடனும் (பாட்னா), நடப்பு சாம்பியன் விதர்பா அணி, ஆந்திராவுடனும் (விஜயவாடா) மோதுகிறது. டெஸ்ட் ஆட்டக்காரர்கள் ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அஸ்வின் (தமிழ்நாடு), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்டோர் ரஞ்சியில் விளையாட உள்ளனர். காயத்தால் ஓய்வில் இருக்கும் பும்ரா, ஹர்திக் பாண்டயா தங்களது உடல்தகுதியை நிரூபிக்க சில ஆட்டங்களில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

28 வயதான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-

விஜய் சங்கர் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), எம்.விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், நடராஜன், விக்னேஷ், அபிஷேக் தன்வார், எம்.அஸ்வின், சித்தார்த், ஷாருக்கான், கே.முகுந்த்.