பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..!

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தொடக்கம் முதலே குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவலில் உள்ள  திருநாவுக்கரசு  உள்ளிட்ட  4 பேர் மீதும்,

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

இரண்டாவது நாளாக இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ  விசாரணைக்கு பரிந்துரை செய்து அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

“கடந்த பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த புகாரில்,

தான் ஒரு காரில் ஒரு கும்பலால் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டதாகவும் தன்னிடம் இருந்த தங்கச் செயினை அவர்கள் திருடி தன்னை நடுரோட்டில் இறக்கி விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஃபேஸ்புக் இணையதளம் போன்றவற்றை ஆய்வு செய்ய இருந்ததால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

ஆனால் இணையதள சேவை , ஃபேஸ்புக் சேவை ஆகியவை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. தவிர இந்த வழக்கின் தன்மையும் அதி தீவிரமானது.

அதன் காரணமாக இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றப் பரிந்துரை செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ-யிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது.

விரைவில் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.