மணல் கயிறு

கதாநாயகன்-கதாநாயகி: அஸ்வின் சேகர்- பூர்ணா.

கதை-திரைக்கதை: எஸ்.வி.சேகர்.

வசனம்-டைரக்‌ஷன்: மதன்குமார்.

கதையின் கரு: திருமணத்துக்கு 8 நிபந்தனைகள் விதிக்கும் மணப்பெண்.

எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, விசு நடித்து, 1982-ம் வருடம் திரைக்கு வந்த ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகம், 34 வருடங்களுக்குப்பின் தயாராகி இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த எஸ்.வி.சேகர், விசு இருவரும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருப்பது, படத்தின் சிறப்பு அம்சம்.

சாந்தி கிருஷ்ணா கதாபாத்திரத்தில், ஜெயஸ்ரீ நடித்து இருக்கிறார்.

முதல் பாகத்தில், எஸ்.வி.சேகர் தனக்கு மணமகளாக வரும் பெண் எப்படியிருக்க வேண்டும்? என்று 8 நிபந்தனைகள் விதித்தது போல், இரண்டாம் பாகத்தில் அவருடைய மகள் பூர்ணா தனக்கு மணமகனாக வருபவருக்கு 8 நிபந்தனைகள் விதிக்கிறார்.

பொய் சொல்லி எஸ்.வி.சேகருக்கும், சாந்தி கிருஷ்ணாவுக்கும் திருமணம் செய்து வைத்த விசு,

அதேபோல் பொய் சொல்லி அஸ்வின் சேகருக்கும், பூர்ணாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

அஸ்வின் சேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது பூர்ணாவுக்கு தெரியவரும்போது, பிரச்சினை வெடிக்கிறது.

அஸ்வின் சேகரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு பூர்ணா வருகிறார். அவர் மீது சபலப்பட்டு, ‘பார்ட்டி’க்கு வரவழைத்து கெடுக்க முயற்சிக்கிறார், பாய் ப்ரெண்ட்.

அவரிடம் இருந்து பூர்ணாவை காப்பாற்றுகிறார், அஸ்வின் சேகர்.

இந்த நிலையில், பூர்ணா கர்ப்பமாகிறார். தனது கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கும் அவருக்கு டாக்டர் வேடத்தில், ‘கவுன்சிலிங்’ கொடுத்து மனதை மாற்றுகிறார், விசு.

பூர்ணா தன்னை ஏற்றுக் கொள்ளாததால் விரக்தி அடைந்த அஸ்வின் சேகர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்.

பூர்ணா மனம் மாறினாரா, அஸ்வின் சேகர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டாரா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

அஸ்வின் சேகர் நடிப்பில் இரண்டாவது படத்திலேயே முன்னேற்றம் தெரிகிறது.

பூர்ணா மீது காதல்வசப்படுவது, ‘மாடலிங்’ ஆக விளம்பர படத்தில் நகைச்சுவையாக நடிப்பது, சண்டை காட்சிகளில் எதிரியை விளாசி தள்ளுவதில் வேகம் காட்டுவது,

பாடல் காட்சிகளில் சுறுசுறுப்பாக நடனம் ஆடுவது என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

பூர்ணா தள தள… பள பள… என்று மப்பும் மந்தாரமுமாக செழிப்பாக தெரிகிறார். அஸ்வின் சேகர் தன்னை ஏமாற்றியது தெரிந்ததும் ஆத்திரப்படுவது,

தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் பாய் ப்ரெண்ட் கன்னத்தில் ‘பளார்’ விடுவது,

வயிற்றில் உள்ள கரு என்ன பாவம் செய்தது? என்பதை உணர்ந்து அதை கலைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது ஆகிய காட்சிகளில் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

விசு, நாரதர் நாயுடு கதாபாத்திரத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். எஸ்.வி.சேகர் அப்பா வேடத்தில்,

படம் முழுக்க சிரிப்பு வெடிகளை கொளுத்திப்போடுகிறார். முன்னாள் கதாநாயகி ஜெயஸ்ரீ அம்மா வேடத்தில், பூர்ணாவுக்கு சரியான போட்டி!

ஜெகன், டெல்லி கணேஷ், சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன் என படத்தில் நிறைய தமாஷ் பட்டாளங்கள்.

தரண் இசையில், பாடல்கள் பரவாயில்லை ரகம். வெளிநாட்டு பாடல் காட்சியில் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, மிரட்டல்.

முதல் பாதி முழுவதிலும் ‘காமெடி’யாக கதை சொன்ன எஸ்.வி.சேகர்-மதன் குமார் கூட்டணி, இரண்டாவது பாதியை எதிர்பார்ப்புடன் நகர்த்தி இருக்கிறது.

சில காட்சிகளில் நாடக வாசனை மிகுதியாக இருக்கிறது. படத்தின் மிக சிறந்த அம்சம், வசனம். வினாடிக்கு வினாடி தியேட்டரை அதிர வைக்கிறது.
‘மணல் கயிறு-2,’ நகைச்சுவை திருவிழா.