92 ரன்னுக்கு சுருண்டது இந்தியா..!

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றி விட்டது.

இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி ஹாமில்டனில் நடக்கிறது.

ரோகித் கேப்டன் : 

கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால், தனது 200வது போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கினார்.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வீரர் சுப்மன் கில் 19, அறிமுகம் ஆனார்.

முகமது ஷமிக்குப் பதில் கலீல் அகமது சேர்க்கப்பட்டார். தோனி இன்றும் களமிறங்கவில்லை.

நியூசிலாந்து அணியில் மன்ரோ, பிரேஸ்வெல், இஷ் சோதி, பெர்குசன் நீக்கப்பட்டு ஜிம்மி நீஷம், கிராண்ட்ஹோம், ஆஸ்லே, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. தவான் 13 ரன்னுக்கு பவுல்ட் ‘வேகத்தில்’ சிக்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் (7) அவுட்டானார். கோஹ்லி இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில், பவுண்டரி அடித்து தனது சர்வதேச ரன் கணக்கைத் துவக்கினார்.

அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் இருவரும், கிராண்ட்ஹோம் வீசிய முதல் ஓவரில் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

சுப்மன் கில் (9) ரன் எடுக்க, கேதர் ஜாதவ் (1) ஏமாற்றினார். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்த இந்திய அணி,

அடுத்து 14 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து பாண்ட்யா 16, குல்தீப் 15 ரன்னுக்கு அவுட்டாகினர்.

கலீல் அகமதுவும் 5 ரன்னுக்கு போல்டாக இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 5, கிராண்ட்ஹோம் 3 விக்கெட் சாய்த்தனர்