இந்தியாவுக்கு 244 ரன்கள் இலக்கு..!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 244 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணி 49 ஓவரில் 243 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் நடக்கிறது.

தொடையின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி விலகினார்.

இவருக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். தடையில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பினார்.

தமிழக ‘ஆல்-ரவுண்டர்’ விஜய் ஷங்கர் நீக்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

முகமது ஷமி ‘வேகத்தில்’ கோலின் முன்ரோ (7) அவுட்டானார். புவனேஷ்வர் பந்தில் மார்டின் கப்டில் (13) வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (28), சகால் ‘சுழலில்’ சிக்கினார்.

பொறுப்பாக ஆடிய ராஸ் டெய்லர் (93), டாம் லதாம் (51) அரைசதம் கடந்தனர்.

ஹர்திக் பாண்ட்யா ‘வேகத்தில்’ நிக்கோல்ஸ் (6), சான்ட்னர் (3) வெளியேறினர். முகமது ஷமி பந்தில் ராஸ் டெய்லர் (93), இஷ் சோதி (12) சரணடைந்தனர்.

பிராஸ்வெல் (15) ரன் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் பந்தில் பவுல்ட் (2) ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி 49 ஓவரில் 243 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பெர்குசன் (2) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா சார்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர், சகால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.