ஸ்மிருதி மந்தனா சதம்... வெற்றி பெற்ற இந்திய அணி..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் அசத்திய ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி நேப்பியரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

நியூசிலாந்து பெண்கள் அணிக்கு சுஜீ பேட்ஸ் (36), டிவைன் (28) ஜோடி நல்ல துவக்கம் தந்தது.

இதன் பின் வந்த டவுன் (0), கேப்டன் சாட்டர்வெயிட் (31), கெர் (28) மூவரும் பூணம் யாதவிடம் சிக்கினர். பின் வரிசையில் ரோவ் (25) சற்று ஆறுதல் தந்தார்.

நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 192 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பூணம் யாதவ், ஏக்தா பிஷ்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது.

இருவரும் துவக்கத்தில் இருந்தே வேகமாக ரன்கள் சேர்த்தனர். ஹட்லஸ்டன் ஓவரில் மந்தனா2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார்.

டிவைன், கெர் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய ஜெமிமா, அரைசதம் எட்டினார்.

டிவைன், கெர் பந்துகளில் தன் பங்கிற்கு சிக்சர் அடித்த மந்தனா, ஒருநாள் அரங்கில் 4வது சதம் கடந்தார்.

முதல் விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்த போது மந்தனா (105) அவுட்டானார்.

இந்திய அணி 33 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. ஜெமிமா (81) அவுட்டாகாமல் இருந்தார்.