வாகா வந்தடைந்தார் அபிநந்தன்..!விண்ணைப் பிளக்கும் வரவேற்பு கோஷம்.. !

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மொத்தமாக தணிந்து இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்களுக்கு போரின் மீது விருப்பம் இல்லை என்று நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.

இந்த நிலையில் அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்க போவதாகவும் கூறினார்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார்.

அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இதற்காக இந்தியா உலக நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் ஜெனிவா ஒப்பந்தம் குறித்து நிறைய விவாதங்கள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார்.

அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார்.

அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்.

அதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்பட்டார்.

லாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லை அழைத்துவரப்பட்டார். இதையடுத்து இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார்.

இவர் இன்று நாடு திரும்புவதால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பது பெரிய போர் ஒன்றை நிறுத்தி உள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும்.

ராணுவ அதிகாரிகள், முக்கிய பாதுகாப்பு படை வீரர்கள் இதனால் இன்று வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.