மேக்னா

விஜய் டி.வி யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும்  ‘தெய்வம் தந்த வீடு’ சீரியலில் சாந்தமான, பாந்தமான மருமகளாக நடித்திருப்பார் ‘சீதா’ என்கிற மேக்னா வின்சென்ட்.

‘என் மருமகள் நல்ல மருமகள்’ என்று சீரியல் மாமியாரிடம் வெரி குட் வாங்கும், சீரியல் மருமகளிடம் பேசினோம்,

”எப்போது சீரியலில் நடிக்கத் தொடங்கினீர்கள்?”

”தமிழில் இது தான் என்னோட முதல் சீரியல். எனக்கு ஸ்கிரீன் புதுசு இல்ல. நான்கு வயசாக இருக்குபோதே நடிக்க வந்துட்டேன்.

ஸ்கிரீனில் அறிமுகமானது, ‘பாப்பி’ என்கிற குடை விளம்பரத்தில்தான்.

அதுக்கப்புறம், ஆன்மீக சீரியலான ‘ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா’ மற்றும் ‘ஆட்டோகிராஃப்’ போன்ற சீரியல்களில் நடிச்சேன்.

அதற்குப் பின்னாடி தொடர்ந்து நிறைய மலையாள சீரியல்ல நடிச்சிருக்கேன். நிறைய விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன்.

பத்தாம் வகுப்புக்காக என் நடிப்பை கொஞ்ச நாட்கள் நிப்பாட்டி வைச்சிருந்தேன். படிப்பு முடிச்சதும் கிடைச்ச வாய்ப்புதான் தமிழில் ‘தெய்வம் தந்த வீடு’  சீரியல்’, அதோட மலையாள வெர்ஷன்தான் ‘ ‘சந்தனமழா’.

தமிழ்நாட்டுல உள்ள எல்லாருக்கும் இப்ப நான் சீதா. ‘தெய்வம் தந்த வீடு’ ஆரம்பிச்ச ஆறாவது மாசத்துல, ‘சந்தனமழா’ ஆரம்பிச்சாங்க.

அதற்குப் பிறகு, மலையாளம், தமிழ் என 6 மொழிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. நான் தமிழிலும், மலையாளத்திலும் நடிச்சிட்டு இருக்கேன்”.

மேக்னா வின்சென்ட்

”தெய்வம் தந்த வீடு’ சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?”

”கயல்’ படம் நடிச்சிட்டு இருந்தப்போதான்  ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் புரொடக்‌ஷன் டீமும், டைரக்டரும் லொக்கேஷன் பார்க்க வந்திருந்தாங்க.

அங்க என்னைப் பார்த்துட்டு, ‘கேரக்டர் இதுதான்… நீங்க பண்ண முடியுமா’னு அந்த கேரக்டரை விளக்கினாங்க.

எனக்கு கதையும், கதாபாத்திரமும் பிடிச்சிருந்ததால உடனே ஓ.கே சொல்லிட்டேன்”.

”கயல் படத்தைத் தொடர்ந்து ஏன் படங்களில் நடிக்கவில்லை?”

”எனக்கு சீரியலில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கு. பார்ப்போம்.. எப்போ முடியுதோ அப்போ கண்டிப்பா வெள்ளித்திரைக்கு நடிக்க வருவேன்.

என் கணவரும் திருமணத்துக்குப் பிறகு நடிக்கிறதுக்கு ‘நோ தடா’னு சொல்லியிருக்கறதால பிரச்னை இல்லை”.

மேக்னா வின்சென்ட்

”உங்கள் கணவர் எப்படி?”

”அவர் பெயர் டான் தோனி. தொழிலதிபரா இருக்கார். சின்ன வயசுல நானும், என் நாத்தனாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு சீரியல்ல நடிச்சோம்.

அப்போ எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது. ரெண்டு, மூன்று வருஷத்துக்கு முன்னாடி, ‘என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?’னு அவரோட அம்மா கேட்டாங்க.

நான் அப்போ, ‘என்னைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கணும் அது மட்டும் போதும்’னு கண்டிஷன் போட்டேன். படிப்பு, வேலை என எதையும் நான் எதிர்பார்க்கல.

மேக்னா

அதற்குப் பிறகு, இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லியிருந்தேன். அவரோட வீட்டில் தீவிரமா கல்யாணப் பேச்சை எடுத்தவுடனே மறுபடியும் என்கிட்ட கேட்டாங்க.

நல்லாத் தெரிந்த குடும்பம்தானே அதனால ஓ.கே சொல்லிட்டேன். அவர் ரொம்ப சாஃப்ட். என்னை சீரியல்ல பார்க்கிறதுக்கும், நேர்ல பார்க்கிறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு.

நான் அவ்வளவு சமத்துப் பொண்ணெல்லாம் கிடையாது. செம சேட்டை பண்ணுவேன். டானை எப்பவும் சீண்டிட்டே இருப்பேன்.

என்னோட மாமனார், மாமியாரும் நல்லப் புரிஞ்சுக்கிறவங்கதான். என்னை ஒரு பேபி மாதிரிதான் பார்க்கிறாங்க”. 

”உங்கள் கதாபாத்திரத்திற்கான வரவேற்பை எப்படி பார்க்கிறீங்க?”

”நான் எப்பவுமே செய்கிற வேலையில் கவனமா இருப்பேன். அது ரொம்ப முக்கியம். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த வாய்ஸ் முக்கியம்.

அந்த கேரக்டருக்கு தகுந்தமாதிரி ஹார்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். ‘தெய்வம் தந்த வீடு’ சீரியலில் ஒரு எபிசோடில் நிஜப்பாம்பை கையில் பிடிச்சேன்.

அந்த அளவுக்கு என் வேலை மேல எனக்கு ஆர்வம் அதிகம். நிறைய ஆடியன்ஸ் என் நடிப்பை ரசிக்கிறதா கேள்விப்பட்டேன்.

அவங்களை திருப்திபடுத்துறது சந்தோஷம். நான் பொதுவாக அணிகிற சேலைகள் பிரைட் கலர்களாகத்தான் இருக்கும். ஏன்னா, எனக்கு பிங், ப்ளூ, ரெட், பிளாக்’னு பிரைட் கலர்ஸ் பிடிக்கும்”.

மேக்னா வின்சென்ட்

”உங்க கல்யாணத் தேதி எப்போ? எங்கே?”

”நிச்சயதார்த்தம் ஏப்ரல் 22 ம் தேதி கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் நடக்குது.

கல்யாணம் ஏப்ரல்  30 ம் தேதி திருச்சூர்ல. கண்டிப்பா வந்து எங்களை வாழ்த்துங்க!”

வாழ்த்துக்கள் டான் தோனி – மேக்னா வின்சென்ட்!