சென்னையில் விமான சேவை பாதிப்பு...!

போகி பண்டிகை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து,

பண்டிகையை கொண்டாடியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்த பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொழுத்தி பண்டிகையை கொண்டாடினா்.

அதன் படி சென்னையிலும் போகி கொண்டாட்டம் கலைகட்டியது.

இந்நிலையில் போகிப் பண்டிகை காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமமடைந்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

சுமாா் 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்னா் விமானங்கள் புறப்பட்டன. மேலும் சென்னை – பெங்களூரு, மும்பை – சென்னை ஜெட் ஏா்வேஸ் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.