புதுடில்லி:

வங்கிகளில் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தின் போது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததின் மூலம் மத்திய அரசுக்கு 1.07 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதுவே 2014 – 19 வரையிலான பா.ஜ. ஆட்சி காலத்தில் 2.79 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதை இந்த ஆண்டு 1.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 694 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 13 பேர் இதுவரை தண்டனை பெற்றுள்ளனர். பொருளாதார குற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மறறும் சுங்க வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

இரண்டு பேரை நாடு கடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐசி வேண்டுகோள் விடுத்துள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று 8 பேரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இண்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.