ஓவர்நைட் ஹீரோயின்! மஞ்சிமா மோகன்

சினிமாவில் ஓவர்நைட் ஹீரோயின் என்பார்கள். ஒரே படத்தில் முன்னணி நடிகையாக மாறுபவரை இப்படிச் சொல்வார்கள்.‘பதினாறு வயதினிலே’ வந்தபோது ஸ்ரீ தேவி, அப்படித்தான் ஓவர்நைட் ஹீரோயினாக கொண்டாடப்பட்டார்.

முன்பே சில படங்கள் நடித்திருந்தாலும் ‘சின்ன தம்பி’, குஷ்பூவை ஓவர்நைட் ஹீரோயினாக மாற்றியது.இதுபோல தமிழ் சினிமாவில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

முதல் படத்திலேயே இந்த அந்தஸ்தை எட்டுபவர்கள் மிகவும் குறைவு.‘அச்சம் என்பது மடமையடா’ மூலமாக மஞ்சிமா மோகன், தமிழில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே இந்த அந்தஸ்தை எட்டியிருக்கிறார்.

அநியாயத்துக்கு அழகு, சின்னச் சின்ன காட்சிகளில் கூட நடிப்பில் காட்டும் வெரைட்டி என்று முதல் படத்திலேயே முப்பது பட அனுபவத்தைக் காட்டியிருக்கும் இவர், பெரிய ரவுண்டு அடிக்கப் போகிறார் என்று கணிக்கிறார்கள் கோலிவுட் ஜோசியர்கள்.

‘சபாஷ், கீர்த்தி சுரேஷுக்கு பலமான போட்டி’ என்று ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.
மனம் திறந்து பேசுகிறார் மஞ்சிமா.

“திடீரென எங்கிருந்து புயல் மாதிரி வந்தீர்கள்?”

“மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, நான் ஹீரோயினாக நடித்த முதல் படம். அதற்கு முன்பாக சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன்.
என்னுடைய அப்பாவும் சினிமாக்காரர்தான். பெயர் விபின் மோகன். நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

‘ஒரு வடக்கன் செல்ஃபீ’ டிரைலரைப் பார்த்ததுமே இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், அந்தப் படத்தின் கதாசிரியர் வினீத் சீனிவாசனிடம் என் போன் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டார்.அவர் எடுக்கப் போகும் புதுப்படத்துக்கான ஆடிஷனில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். இப்படித்தான் தமிழுக்கு வந்தேன்.”

“ஒத்தைக் கல்லில் இரட்டை மாங்காய் என்பது மாதிரி தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகி இருக்கிறீர்கள்…”

“உண்மையில் மிகவும் சிரமப்பட்டேன். தமிழில் ஓக்கே ஆன காட்சியை உடனே, தெலுங்குக்காக படமாக்குவார்கள்.முதலில் நடித்த அதே பிக்கப்பை, இதிலும் நீட்டிக்க வேண்டும். ஆரம்பத்தில் திணறிய நான், ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தேன்.

இருமொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். மொழி புரிந்துவிட்டதால், வசனங்கள் உச்சரிப்பதோ, காட்சிக்கு பொருத்தமான ரியாக்ஷன் கொடுப்பதோ சுலபமாகி விட்டது.வேற்று மொழிகளில் நடிக்க விரும்புபவர்கள் அந்தந்த மொழிகளைக் கற்றுக்கொண்டால் நடிப்பது ரொம்ப ஈஸி.

‘அச்சம் என்பது மடமையடா’ ஷூட்டிங்கின்போது எந்த மொழி காட்சியை முதலில் படமாக்குவார் என்பது யாருக்குமே தெரியாது.ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் சிம்புவோடு நடிக்க வேண்டியிருக்கும்.

ஒரு சின்ன கேப் விட்டு அதே காட்சிகளை நாகசைதன்யாவோடு நடிப்பேன். ஹீரோக்களுக்கு சிரமமில்லை.இரு படங்களிலும் நானே ஹீரோயின் என்பதால் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டது. ஆனால், இந்த அனுபவமே எனக்கு பத்து படங்களில் நடித்த உணர்வைக் கொடுத்தது. மெச்சூரிட்டி கூடியது.

இப்போது திரையில் பார்க்கும்போது நானா இப்படி நடித்திருக்கிறேன் என்று என்னாலேயே நம்பமுடியவில்லை.ரசிகர்களும் என் நடிப்பை விரும்பி ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“தமிழில் அடுத்தடுத்து சுனாமி கிளப்புகிறீர்கள் போலிருக்கிறதே?”

“உதயநிதி சாருக்கு ஜோடியாக, ‘தூங்கா நகரம்’ கவுரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கிறேன். ‘சுந்தர பாண்டியன்’ இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபுவின் ஹீரோயினாக ‘முடிசூடா மன்னனி’ல் நடித்து வருகிறேன்.

இது தவிர்த்து தினமும் நாலு இயக்குநர்களாவது கதை சொல்ல வேண்டும் என்று தொடர்பு கொள்கிறார்கள். எல்லாமே பெரிய வாய்ப்பு களாக வருகிறது. எதையுமே மிஸ் செய்ய மனமில்லை.நான் நடித்து ஒரே ஒரு படம்தான் இங்கே ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தளவுக்கு பிஸியாவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.”

“எப்படிப்பட்ட கேரக்டர்கள் செய்ய விருப்பம்?”

“அப்படி எந்த வரைமுறையும் இல்லை. முதல் படத்திலேயே என்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்பை கவுதம் வாசுதேவ் மேனன் வழங்கியிருக்கிறார்.அதனால், எனக்கு எப்படிப்பட்ட கேரக்டர்களை கொடுக்க முடியும் என்று இயக்குநர்களுக்கு ஓர் ஐடியா கிடைத்திருக்கிறது.

‘முடிசூடா மன்னன்’ படத்தின் கதையை எஸ்.ஆர்.பிரபாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என்னுடைய கேரக்டரை அப்படியே விஷுவல் செய்து பார்த்தேன்.பாதிக்கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஓக்கே செய்துவிட்டேன்.

ஒரு கதையில் என்னுடைய கேரக்டர் முழுமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன்.ஓரிரு காட்சிகளாக இருந்தாலும், ரசிகர்களின் மனசில் நிற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

“நிறைய தமிழ்ப்படங்களில் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். படப்பிடிப்பில் எப்படி சமாளிக்கிறீர்கள்?”

“ஏற்கனவே சொன்னதுமாதிரி தமிழ் நன்றாக பேசக் கற்றுக் கொண்டேன். ‘முடிசூடா மன்னன்’ படப்பிடிப்பில் அனைவரோடும் தமிழில்தான் பேசுகிறேன்.இன்னும் இந்த மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் விரைவில் பக்காவாக ‘சென்னைத்தமிழ்’ பேசுமளவுக்கு பிக்கப் ஆகிவிடுவேன்.”

“தமிழ் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”“மலையாள ரசிகர்களை ஒப்பிடுகையில் ரசனையில் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.இவர்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது சிரமம். சினிமா குடும்பம் என்பதால் எனக்கு ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது.

தமிழ்ப்பட உலகில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொழில்பக்தி அதிகம். பணத்துக்காக என்றில்லாமல் தங்கள் கடமையாக வேலையைச் செய்கிறார்கள்.இங்கே பணிபுரிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பணி குறித்த திருப்தியையும் தருகிறது.”

“குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கும், ஹீரோயினாக நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?”

“அறியா வயதில் தந்தையோடு படப்பிடிப்புக்கு சென்ற காலங்கள் மிகவும் மகிழ்ச்சியானவை.‘ஓடு’, ‘நட’, ‘அழு’ என்று ஒருவரிகளில் நடிப்பு சொல்லித் தருவார்கள். ஏன் எடுக்கிறார்கள், எதற்கு எடுக்கிறார்கள் என்று தெரியாது.

முழுப்படமாக பார்க்கும்போதுதான் நாம் எப்படி நடித்திருக்கிறோம் என்பது நமக்கே தெரியும். விளையாட்டுத்தனமாக இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆனால்- ஹீரோயின் எனும்போது படத்தின் பொறுப்பு நம் மீது சுமையாக இறங்குகிறது.

கதையைப் புரிந்து கொண்டால்தான் எடுக்கப்படும் காட்சியின் தீவிரத்தை உணர்ந்து நடிக்க முடியும். ஹீரோவுக்குப் பிறகு ரசிகர்கள் அதிகம் கவனிப்பது ஹீரோயினைத்தான்.”

“கேரள அரசின் விருதெல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?”

“நான்காம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை பள்ளியிலே பிரேயர். எல்லாரும் கூடியிருந்தோம்.அப்போது மைக்கில் என் பள்ளி முதல்வர், நான் நடித்த படம் ஒன்றுக்காக எனக்கு கேரள அரசின் விருது கிடைத்திருப்பதை அறிவித்தார்.

மொத்த பள்ளியும் கைதட்டி என்னை உற்சாகப்படுத்தியது. என்ன ஏதுவென்று புரியாத வயது. ஆனால், எல்லோரும் நம்மைப் பாராட்டுகிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது.வீட்டுக்குப் போய் ‘விருது என்றால் என்ன?’வென்று கேட்டேன். ‘அது மிகப்பெரிய விஷயம்.அரசாங்கமே உன்னை கவுரவப் படுத்தியிருக்கிறது’ என்றார்கள். அதுபோன்ற கவுரவங்களை ஹீரோயினாகவும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”

“உங்களை ஹீரோயினாகத்தான் உங்கள் வீட்டில் வளர்த்தார்களா?”

“இல்லவே இல்லை. நான் ஹீரோயினாக நடிக்க வந்தது முதலில் அவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. டிகிரி முடித்துவிட்டு வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். எல்லோரையும் நான்தான் சமாதானப்படுத்தினேன். கடைசியில் ‘உன் வாழ்க்கை உன் கையில். நீயே முடிவெடுத்துக் கொள்’ என்று என் விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்கள்.நேர்மையாகவும், அர்ப்பணிப்புத் தன்மையோடும் அணுகினால் எந்தத் துறையிலுமே வெற்றி நிச்சயம். என்னுடைய முடிவு சரியானது என்று என் குடும்பத்தினருக்கு விளங்க வைப்பேன்.”

“கீர்த்தி சுரேஷுக்குப் போட்டியாக உங்களை ரசிகர்கள் கருதுகிறார்களே?”

“கீர்த்தி சுரேஷை எனக்கு சின்ன வயதிலிருந்தே பழக்கம். அவருடைய தந்தையும், என் தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.என் தந்தை பணியாற்றிய படங்களில் கீர்த்தியின் அம்மா மேனகா நடித்திருக்கிறார்.

 பரஸ்பரம் நாங்கள் இருவருமே எங்களை போட்டியாளர்களாகக் கருத மாட்டோம்.சினிமாவில் வருடா வருடம் பல்வேறு மொழிகளில், பல நூறு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள்.

ஒருவரை ஒருவர் போட்டி என்று நினைத்துக் கொண்டால் ஒருவருமே வாழமுடியாது. என்னுடைய கவனம் மொத்தமும் நடிப்பில் மட்டுமே இருக்கிறது.எனக்கான வாய்ப்புகள் எனக்கு. அவரவருக்கான வாய்ப்புகள் அவரவருக்கு.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ‘ஒருநாள் நீ தூங்கி எழும்போது, உன் திறமை மொத்தமும் இழந்துவிடுகிறாய். அப்போது என்ன செய்வாய்?’ என கவுதம் வாசுதேவ் மேனன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேட்டார்.அப்படியே பயத்தில் வெலவெலத்துப் போய்விட்டேன். அந்த பயம், எனக்குள் இருக்கும்வரை நான் ஈடுபட்டிருக்கும் சினிமாத்துறைக்கு சின்சியராக இருப்பேன்.”