வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு!
Advertisement
Advertisement

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையானது,

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

போதிய மழை இல்லாததால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட இரு போக விவசாய நிலங்களுக்கு ஏற்கெனவே தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் 53.77 அடியாக உள்ளது. விவசாயத்திற்குத் தண்ணீர் திறப்பதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு,

குறிப்பிட்ட நாள்களுக்குத் தண்ணீர் திறக்கும் முறை தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, நேற்று முதல் (29/01/2019) ஆறு நாள்களுக்கு 184 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 3 நாள்களுக்குப் பிறகு 440 கன அடியாகக் குறைக்கப்படும்.

4 மற்றும் 5 ம் நாள்களில் 250 கன அடியாகக் குறைக்கப்பட்டு வரும் 4ம் தேதி காலை தண்ணீர் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுவரும் சூழலில், அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவது  குறிப்பிடத்தக்கது.