ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகல தொடக்கம்!

0
115
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகல தொடக்கம்!
Advertisement
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
பூலோக வைகுண்டம், சொர்க்க பூமி, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்,
Advertisement

பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண, இந்தியா முழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகை தருவார்கள்.

அந்தவகையில் இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்றிரவு 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.

அதனை தொடர்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் அரையர்களின் அபிநயம், வியாக்யானத்துடன் திருநெடுந்தாண்டகம் நடைபெற்றது.

தொடர்ந்து பகல்பத்து விழாவின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து தினமும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார்.
பகல்பத்தின் கடைசி நாளான 17-ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 18-ம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.