விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி மதுரையில் பந்த்…!

0
116
விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி மதுரையில் பந்த்...!
Advertisement
Advertisement

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தையொட்டி  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரையில் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை விமானநிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம்,

ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும்.

ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்தில் முத்துராமலிங்கம் என்ற பெயரை மாற்றி அவரது முழு பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அச்சிடப்பட்டு,

அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவையை வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,

பல்வேறு தேவர் அமைப்பினர் மதுரை நகரில் இன்று ஒரு நாள் பந்த், கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

80 சதவீதமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன.

ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மட்டுமே விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தினமும் பரபரப்பாக காணப்படும் மதுரை விமான நிலையம் இன்று வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

விமான நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்,

அதிவேக அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் வெளி வளாகத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் தலைமையில்,

விமான நிலைய பின்புறம், பெருங்குடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு காணப்படுவதால் பயணிகள் சிலரை தவிர விமான நிலையம் காவல்துறையினரால் நிரம்பியுள்ளது.

இதற்கிடையே, 500க்கும் மேற்பட்ட தேவர் அமைப்பினர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்துகளும் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, நேற்று மாலை 6 மணி முதல் மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு தற்போது வரை கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.