சைத்தான்

31
669
சைத்தான்
Advertisement
Advertisement

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கும், அருந்ததி நாயருக்கும் திருமணம் ஆகிறது.

திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கு மட்டும் அடிக்கடி ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

இந்த வசியக் குரலின் தாக்கத்தால் பலமுறை விஜய் ஆண்டனி தற்கொலைக்கு முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றி விடுகின்றனர்.

இந்நிலையில், தனது நண்பர் முருகதாஸுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் ஆண்டனியை அந்த குரல் மீண்டும் தற்கொலைக்கு தூண்டுகிறது.

அப்போது காரை விபத்துக்குள்ளாக்குகிறார் விஜய் ஆண்டனி. இந்த விபத்தில் நண்பன் முருகதாஸ் இறந்துபோக, விஜய் ஆண்டனி மட்டும் தப்பிக்கிறார்.

அதன்பிறகு, தனக்கு மட்டும் கேட்கும் அந்த குரலைப் பற்றி தனது அலுவலக மேலதிகாரியான ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி.

ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் ஆண்டனியை மனோதத்துவ நிபுணரான கிட்டுவிடம் அழைத்துச் செல்கிறார். கிட்டு, விஜய் ஆண்டனியின் ஆழ்மனத்திற்குள் ஊடுருவி விசாரிக்கையில், பூர்வ ஜென்மத்தில் விஜய் ஆண்டனி, ஆசிரியராக இருந்ததாகவும், அவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்ததாகவும் அவள் விஜய் ஆண்டனிக்கு துரோகம் செய்துவிட்டு, அவரை கொன்றுவிட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்த ஜென்மத்திலும் ஜெயலட்சுமிதான் விஜய் ஆண்டனியை கொலை செய்வதற்காக இதுமாதிரியான சம்பவங்களெல்லாம் நடப்பதாக தெரிய வருகிறது.

ஜெயலட்சுமி தஞ்சாவூரில் இருப்பதாக அறிந்து அவரைத் தேடி அங்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது, அங்கு பழைய ஜெயலட்சுமியின் போட்டோ இவருக்கு கிடைக்கிறது.

அந்த ஜெயலட்சுமியின் புகைப்படம் தன்னுடைய மனைவியின் முகத்தோடு ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் விஜய் ஆண்டனி.

இறுதியில், விஜய் ஆண்டனி அந்த ஜெயலட்சுமி யார் என்பதை கண்டறிந்தாரா? உண்மையிலேயே அவரால்தான் விஜய் ஆண்டனிக்கு தற்கொலை தொந்தரவு உள்ளதா?

அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுக்க விஜய் ஆண்டனியை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இதனால், படத்தின் மொத்த பாரத்தையும் விஜய் ஆண்டனியே தனது தோளில் தாங்கி நடித்திருக்கிறார்.

பதட்டமான காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூர்வ ஜென்மத்தில் வரும் ஆசிரியராகட்டும், இன்றைய ஜென்மத்தில் வரும் சாப்ட்வேர் இன்ஜினியராகட்டும் இரு வேறு கதாபாத்திரத்தின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார். இனிவரும் படங்களில் அவற்றை சரிசெய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அருந்ததி நாயர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். திருமணமான பிறகு விஜய் ஆண்டனியிடம் ரொமான்ஸ் கலந்து இவர் பேசும் வசனங்கள் எல்லாம் கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறது.

கிட்டு, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் என படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனது முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு புது முயற்சியை கையிலெடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற பதைபதைப்பை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். முதல்பாதியில் போடும் முடிச்சுகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் வருகிறது.

அந்த பதில் நிறைய படங்களில் நாம் பார்த்திருப்பதுதான் என்றாலும், அது சரியானதுதான் என்பதுபோல் ஒத்துக்கொள்ள முடிகிறது.

படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படத்தின் முதல் பத்து நிமிட காட்சி வெளியிட்டபோதே அதில் வந்த பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.

அதை படம் முழுக்க பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ‘ஜெயலட்சுமி’ என்று சொல்லும்விதத்தையே வித்தியாசமான முறையில் திரையில் அலறவிட்டிருப்பது சிறப்பு.

பிரதீப் கலிபுரயாத்தின் ஒளிப்பதிவும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக படமாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு காட்சிக்கும் தேவைக்கேற்ற ஒளியமைப்பை வைத்து பார்ப்பவர்களுக்கு எந்த நெருடலும் இல்லாதவாறு கதையை நகர்த்துவதற்கு இவரது கேமரா ஒத்துழைத்துள்ளது.

மொத்தத்தில் ‘சைத்தான்’ அனைவருக்கும் பிடிக்கும்.