தேர்தலை ஒத்திவைக்க கோரி முறையீடு..!

தேர்தலை ஒத்திவைக்க கோரி முறையீடு..!
Advertisement
Advertisement

தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா, ரம்ஜான் நோம்பு போன்ற காரணங்களைக் காட்டி லோக்சபா தேர்தல் தேதிகளை ஒத்திவைக்கும்படி நாடு முழுவதும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை நடைபெறுவதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்கும்படி நாடு முழுவதும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மே 5ம் தேதி துவங்கி ஜூன் 4 வரை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவங்குவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்கும்படி மேற்குவங்கத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடத்தினால் அது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என சுமார் 31 சதவீத இஸ்லாமியர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

மேற்குவங்கம், பீகார், உ.பி.,யில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நோன்பின்போது ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என மேற்குவங்க திரிணாமுல் காங்., தலைவரும், கோல்கட்டா மேயருமான பிகாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

இதே போன்று தமிழகத்தில் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18 அன்று மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால்,

மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தேர்தலை ஒத்தி வைக்குமாறு மதுரையின் அனைத்து கட்சியினர், மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.