மேலதிகாரி விடுமுறை அளிக்காததால் காவலர் தற்கொலை…!

மேலதிகாரி விடுமுறை அளிக்காததால் காவலர் தற்கொலை...!
Advertisement
Advertisement

உடல் நலிவுற்ற தாயை கவனித்துக் கொள்ள மேலதிகாரி விடுமுறை தர மறுத்ததால்,

மன உளைச்சல் ஏற்பட்டு மதுவிலக்கு பிரிவு காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகேவுள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45).

இவர் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு காவலராக நீதிமன்ற வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்து வந்தார்.

இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் மாமதி (12) என்ற மகளும் மற்றும் சுவைமணி (9) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் அவரது தாய் சரோஜினி மற்றும் தந்தை சுப்பிரமணியனும் மாமணியுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் பதற்றமடைந்த மாமணி, தன்னுடைய மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டு கைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது மேலதிகாரி நாகூர் சந்தன கூடு விழாவில் இருந்துள்ளார். அழைப்பை ஏற்ற அவர், மாமணிக்கு விடுமுறை தர மறுத்துள்ளார்.

எனினும், மாமணி 6 நாட்கள் விடுமுறை கேட்டு காவல் நிலையத்தில் விண்ணப்பம் எழுதி வைத்துவிட்டு தேத்தாகுடிக்கு சென்றுவிட்டார். 

அங்கு தாய் சரோஜினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்து வந்தார்.

மீண்டும் பணியில் சேருவதற்காக சக காவலர்களை அழைத்து தன்னுடைய விடுமுறை விண்ணப்பம் ஏற்கப்பட்டு விட்டதா என்று கேட்டுள்ளார். 

அவர்கள் விடுமுறைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் மாமணிக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

அதன் காரணமாக நேற்று முன்தினம் விஷம் அருந்திவிட்ட வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, சிகிச்சை பலனின்றி காவலர் மாமணி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.