அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்..!

அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்..!
Advertisement
Advertisement

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது.

திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த பா.ம.க. இன்று தேர்தலுக்காக அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் துரோக கூட்டணியாகும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிர்வாகம் நடத்த தெரியுமா? என்று கேட்டவர் டாக்டர் ராமதாஸ், ஊழல் ஆட்சி என்று அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி பட்டவர்த்தனமாக பேசிவிட்டு இப்போது கூட்டணி அமைத்துள்ளார்.

எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல பண நல கூட்டணி.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் கடல் தாண்டி ஊழல் செய்துள்ளதை பார்க்கிறோம்.

அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் சிறுசேரியில் ஒரு கட்டிடம் கட்ட இந்த ஆட்சியில் அனுமதி கேட்டனர். இதற்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.

இப்படி பணம் கொடுத்தது தவறு என்று அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

எனவே இதுபற்றி முறையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளோம். 1 வாரம் பொறுத்திருப்போம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.