யானை தந்தம் போல மதிப்பு மிக்கது எது தெரியுமா?

50
970
சொல்கிறார் மகாவீரர்
Advertisement
Advertisement

* துன்பத்தில் நமக்கு கைகொடுத்த நல்லவர்களின் உதவியை மறப்பது கூடாது. நன்றியுணர்வு என்பது யானைத் தந்தம் போல மதிப்பு மிக்கதாகும்.

* உண்மை மட்டுமே பேசி நேர்வழியில் வாழ்வு நடத்த வேண்டும். பிறருக்கு நன்மை செய்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்.

* உறுதியான மனம் படைத்தவனுக்கு துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி இயல்பாகவே அமைந்திருக்கும். துறவு வாழ்விற்குத் தேவையான அடிப்படை குணம் இது.

* இல்லறம் என்பது பிறர் நலம் பேணுவதாகும். இல்லறத்தில் இருந்து கொண்டு பிறருக்குச் செய்யும் சேவை பாராட்டக்கூடியதாகும்.

* வெளிப்பகட்டைக் கண்டு இந்த உலகம் மயங்குகிறது. வாசனைத் தைலம் பூசுவதை விட, மனத்தூய்மை மிகவும் போற்றுவதற்குஉரியது.

* பிறப்பால் யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. குணத்தைக் கொண்டே மனிதனை மதிப்பிட வேண்டும்.

* தலை சிறந்த தர்மம் என்பது பிற உயிர்களின் பசியைப் போக்குவதாகும். செய்த தர்மத்தின் பயனால், இப்பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் தீங்கில்லாத நல்வாழ்வு அமையும்.

* வாய்மையின் வலிமையால் மனிதன் பிறவிக்கடலில் இருந்து காப்பாற்றப்படுவான். வாய்மை சந்திர மண்டலத்தைக் காட்டிலும் சுத்தமானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கது.

* பேராசை உள்ளவனுக்கு இந்த உலகம் முழுவதையும் அளித்தாலும் திருப்தி உண்டாகாது. தேவைக்கு மேல் பொருள் கிடைத்தால் அது தீயஇயல்புகளை உண்டாக்கும்.

* பொய் பேசுபவன் அடிக்கடி கோபத்திற்கு ஆளாவான். மனத்தூய்மை, பணிவு, பண்பு, புகழ் எல்லா நற்குணங்களும் பொய்யால் மறையும். பொய் பேசுபவனைச் சார்ந்தவர்களுக்கும் தீமை உண்டாக்கும்.

* கூட்டு உழைப்பால் கிடைத்த பொருளை கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மறுபிறவியில் நற்கதி உண்டாகாது.

* கசப்பான மருந்து நோய் போக்கி நலம் சேர்ப்பது போல, நல்ல நண்பர்களின் கசப்பு மொழிகளும் கஷ்டத்தைப் போக்கி நன்மை தரும்.

* மவுனமாகத் தியானித்தால் மனம் அமைதி பெறும். எண்ணம் சுத்தமாகும். இதன் மூலம் பிறவி என்னும் துன்பக் கடலை எளிதாக கடக்க முடியும்.

* நல்ல நம்பிக்கை இன்றி நல்லறிவு உண்டாகாது. விவேகம் என்னும் நல்ல அறிவின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஆனால் யாருக்கும் நல்லறிவு சுலபமாக வருவதில்லை.

* பேராசை, கோபம், பயம், விளையாட்டுப்புத்தி ஆகிய காரணங்களால் மனிதன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்.

* செய்த தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்வதில் தயக்கம் கூடாது. இதில் பிடிவாதமோ, போலி கவுரவம் கொள்ளவோ தேவையில்லை.

* கணநேரம் கூட வீண்பொழுது போக்குவது கூடாது. பயனுள்ள செயல்களில் ஈடுபடுபவனே அனைவரின் போற்றுதலுக்குரியவனாக திகழ்வான்.

சொல்கிறார் மகாவீரர்