கட்டப்பாவ காணோம்

36
784
கட்டப்பாவ காணோம்
Advertisement
Advertisement

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயகுமார், லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், டாடி சரவணன், சேது, சூப்பர் குட் சுப்பிரமணி…

உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, இவர்கள் எல்லோரையும் காட்டிலும் ஒரு வாஸ்து மீன் வகை தொகையாக முக்கிய பாத்திரத்தில் நடிக்க,

வின்ட் சிம்ஸ் மீடியா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மணி செய்யோன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் ” கட்டப்பாவ காணோம் “.

வஞ்சிரம் எனும் சென்னை மீஞ்சூர் பகுதியை சார்ந்த தாதா மைம் கோபி, சென்டிமென்டாய் தன் குழந்தை மாதிரி வளர்த்து வரும் வாஸ்து மீன் கொள்ளை போகிறது.

அது, அங்கே இங்கே கை மாறி, இளம் காதல் தம்பதிகள் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் வசம் வந்து சேர்கிறது.

ராசியான மீனான அது வந்த நேரம் அது நாள் வரை, பிறந்தது முதல் தொட்ட எதுவும் துலங்காது பேட் லக் பாண்டி ஆகத் திரியும் சிபிராஜூக்கு குட்லக் ஒர்க் அவுட் ஆனதா?

அல்லது அந்த மீனை தேடும் வஞ்சிரத்தின் ஆட்களாளும், இன்னும் சிலராலும் பேட் லக்கே தொடர்ந்ததா? என்னும் கதையை டபுள், டிரிபிள் மீனிங்கில் “கட்டப்பாவ காணோம்” படமாக சிரிக்கவும்,

சற்றே சிந்திக்கவும் காட்சிப்படுத்த முயன்று, அதில் முன்பாதியை காமெடியாகவும், பின் பாதியை சற்றே கடியாகவும் தந்திருக்கின்றனர்.

ராசியான வாஸ்து மீன் அதற்கு ஆசைப்படும் மனிதர்கள் என கதைக்களத்தை மிகவும் நகைச்சுவையாக நகர்த்தியிருக்கிறார்.

பேட் லக் பாண்டி எனும் பாண்டியனாக சிபிராஜ், தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

என்ன? இவரது, “நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் நாய்க்கு முக்கியத்துவமும் “ஜாக்சன்துரை”யில் பேய்க்கு முக்கியத்துவமும் கூடுதலாக இருந்தது போல்,

இதில் இவரைக் காட்டிலும் அந்த அதிர்ஷ்ட வாஸ்து மீனுக்கு சற்றே அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதற்கு சிபி., பெருந்தன்மையாய் ஒப்புக் கொண்டிருப்பதற்காகவும் அவரைப் பாராட்டலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபியை “பப்”பில், “புல்-மப்”பில் பார்த்து காதல் வயப்படும் சில்க் மீனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், தான் தேசிய விருது பட நடிகை என்பதையும் மறந்துவிட்டு குடி, கும்மாளம் என ரொம்பவே இறங்கி நடித்திருக்கிறார்.

“யார் ரா உங்க அப்பா?, நீ என்ன தொட்டா நான் தான் கெட்டுப் போவேன், அது கூடத் தெரியாம…” எனும் இடத்தில் தியேட்டரில் ரசிகனை தெறிக்க விடுகிறார் அம்மணி.

சாந்தினி தமிழரசன்

சிபியுடன் சின்ன வயதிலிருந்து ஒன்றாக படித்த சர்ப்ரைஸ் ஷீலாவாக சாந்தினி தமிழரசன், வாஸ்து மீன் மாதிரியே வசீகரிக்கிறார்.

டபுள் மீனிங் காளி வெங்கட், வஞ்சரம் – மைம் கோபி, பெயிண்டர் நண்டு – யோகி பாபு, சுறா – திருமுருகன், அய்ர – ஜெயகுமார், ஆலி – லிவிங்ஸ்டன், ஜெயகோபால் – சித்ரா லட்சுமணன், ஆறு விரல் சங்கரா – டாடிசரவணன், கயல் – பேபி மோனிகா, கயலின் மேஜிக் அப்பா – சேது, சூப்டர் குட் சுப்பிரமணி, வெங்கட், உள்ளிட்டவர்களில் படத்தில் ஒரு பாத்திரமாகவே வரும் வாஸ்து மீன், நாயகி சாந்தினி மாதிரியே காளி வெங்கட், யோகி பாபு, டாடி சரவணன் மூவரும் ரசிகனுக்கு கடுப்பேற்றாது கலகலப்பூட்டுகின்றனர்.

எம்.லட்சுமி தேவ்வின் கலை இயக்கத்தில் மீன் தொட்டி உள்ளிட்டவைகள் மிளிர்ந்திருக்கிறது. சதீஷ்குமாரின் படத்தொகுப்பில், வாஸ்து மீனிடம் வேண்டிக் கொண்டு கத்திரி இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்,

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவில், ஒரு குறையுமில்லை. சந்தோஷ் தயாநிதியின் இசையில், “ஏ பெண்ணே பெண்ணே….” உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் ஒ.கே.

மணி செய்யோன் எழுத்து, இயக்கத்தில், “முட்டா பசங்கள்ட்ட தானே… பணம் நிறைய இருக்கு…” என்பது உள்ளிட்ட கவனிக்க வைக்கும் “பன்ச்”களும், மீன் சம்பந்தப்பட்ட படத்தில் பெரும்பாலான கேரக்டர்களுக்கு, வஞ்சிரம், சங்கரா, அய்ர, எறா, சுறா…. என மீன்களின் பெயர்களையே சூட்டியிருக்கும் விதமும் ரசனை.

அதேநேரம், லக்கி வாஸ்து மீனை கொள்ளையில் பறிகொடுத்து, அதனால் இன்கம்டாக்ஸ் ரெய்டில் பணம் இழந்த வஞ்சிரம் – மைம் கோபி, ஒரே நாளில் ஐந்தரை கோடி பணத்தை தயார் செய்து அந்த மீனை திரும்ப பெற முயற்சிப்பது எப்படி? என்பதும்,

யார், யவரென்றே தெரியாத சிலருடன் சிபி, இளம் மனைவி ஐஸ்வர்யாவுடன் தனியாக வசிக்கும் வீட்டில் சரக்கு அடிக்க சம்மதிப்பதும், அவளுக்கு சரக்கு தரலைன்னு கோபத்தில் இருக்கா…, அவளும், நானும் முதன் முதலா ஒரு “பப்”பில் குடிக்க போனபோது தான் மீட் பண்ணி லவ் பண்ண ஆரம்பித்தோம் என அவர்களிடம் குடிக்க உட்கார்ந்ததுமே உளறுவதும் உள்ளிட்ட சில, பல லாஜிக் மிஸ்டேக்குகள்….. துருத்திக் கொண்டு தெரிவது உள்ளிட்ட சில பல குறைகள் பலவீனம் என்றாலும், “கட்டப்பாவ காணோம்” படத்தை ஒரு முறை குடும்பத்தோடு அல்லாது தனியாக சென்று பார்க்கலாம்!

ஆக மொத்தத்தில், “கட்டப்பாவ காணோம்” படத்தை ஒரு வேளை, அந்த அதிர்ஷ்ட மீன் காப்பாற்றலாம்!”