கோடநாடு மர்மம்..! அரசியல் கட்சிகள் ஆளுநரை சந்திப்பது எதற்காக..?

கோடநாடு மர்மம்..! அரசியல் கட்சிகள் ஆளுநரை சந்திப்பது எதற்காக..?
Advertisement
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமானது கோடநாடு எஸ்டேட்.

இங்கு நடைபெற்ற கொள்ளை சம்பவங்களை அடுத்து, முக்கிய ஆவணங்கள் மாயமாகின.

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 5 அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக,

தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,

மேத்யூஸ் உடன் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவர் சயான், மற்றொரு குற்றவாளி மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதில் முதலமைச்சர் பழனிசாமி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை முதலமைச்சர் பழனிசாமி மறுத்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றார்.

இதையடுத்து சயன், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட்டார்.

ஐஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, ஜெயவர்தன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை இன்று சந்தித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத் தான். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார்.

கோடநாட்டில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் சொல்ல வேண்டும். தவறான கருத்து கூறினால் 7 வருட சிறை உண்டு என ஸ்டாலின் உணர வேண்டும்.

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் நாங்கள் விளக்கினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார் என்று தெரிவித்தார்.