உயிர் பெற்ற ஜன் தன் கணக்கு!

26
614
ஜன் தன் கணக்கு
Advertisement
Advertisement

பண மதிப்பு நீக்கத்தின் காரணமாக பணமற்ற பொருளாதார நடவடிக் கைகள் அதிகரிக்கும் என்பதும், இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் முறைப்படுத்தப்பட்ட வங்கி பரிவர்தனைகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு முன்னால், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத மக்களை வங்கி நடவடிக்கைகளுக்கு கொண்டு வந்தவை ஜன் தன் கணக்குகள்.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 40 சதவீத மக்கள் வங்கிச் சேவைக்கு அப்பால் இருக்கிறார்கள் என்று உணர்ந்த அரசு 2014-ம் ஆண்டு எடுத்த முயற்சிதான் ஜன் தன் கணக்கு திட்டம்.

வங்கிக் கணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்டன.

அரசின் மானியங்கள், நலத்திட்ட உதவிகள் இந்த கணக்கு வழியாக அரசு செலுத்துவதும் திட்டத்தின் நோக்கம்.

ஜன் தன் கணக்குகளுக்காக ரூபே டெபிட் கார்டும் விநியோகிக்கப்பட்டன.

2016 செப்டம்பர் வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 24 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த கணக்கில் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஜீரோ பேலன்ஸ் என்று தொடங்கப்பட்டன. ஆனால் ஜீரோ பேலன்ஸுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜன் தன் கணக்குகள், சில மாதங்களில் குறைந்து கொண்டே வந்துள்ளது.

இதனால் மக்கள் தங்களது கணக்கு களில் பரிவர்த்தனைகளை தொடங்கி விட்டனர் என்கிற கருத்து உருவானது. இதனால் இந்த திட்டம் சரியான பாதையில் செல்ல தொடங்கிவிட்ட தாகவே அரசு கருதியது.

ஆனால் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் குறைந்து வருவதற்கு பின்னால் வங்கி ஊழியர்கள் சில குளறுபடிகள் செய்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தன.

ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் இருக்கக்கூடாது என்பதற்காக வங்கிகள் தாங்களே அந்த கணக்குகளில் பணம் செலுத்துவதாக தெரியவந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் படி, இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 24 கோடி வங்கிக் கணக்குகளில் சுமார் 40 லட்சம் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்துள்ளது.

சுமார் 1.05 கோடி வங்கிக் கணக்குகளில் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இந்த கணக்குகளில் எந்த பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை என்றால் இவை செயல்படாத கணக்குகள் என்கிற வகையில் சென்றுவிடும்.

இந்த திட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்கிற புரிதலை உருவாக்கிவிடும்.

எனவே இதை மாற்ற ஊழியர்களே தங்களது பயணப்படிகள், அலுவலக செலவு படிகளை இந்த கணக்குகளில் தொடர்ச்சியாக ரூ.1, ரு.2 என செலுத்தியுள்ளனர்.

இதனால் இவற்றை செயல்பாட்டில் உள்ள கணக்குகளாக காட்டியுள்ளனர். ஏனென்றால் ஆறு மாதத்துக்கு மேல் ஒரு கணக்கில் பணம் செலுத்தாமல் இருந்தால் அந்தக் கணக்கு செயலிழந்துவிடும்.

மீண்டும் இதை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதாரங்களை வங்கிக்கு மீண்டும் கொடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்திவரும் முன்னணி 12 வங்கிகளின் 36 சதவீத கணக்குகளில் ரூ.10 வரையில் பணம் இருந்துள்ளது.

தங்களது கணக்கில் இந்த பணம் இருப்பதுகூட குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியவில்லை.

பணம் இல்லாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வங்கி அதிகாரிகள் பணம் செலுத்தியது பிறகுதான் கண்டு பிடிக்கப்பட்டது.

ஒருவேளை  இந்த கணக்குகளை ஊழியர்கள் செயல்படாத நிலைக்கு கொண்டு சென்றிருந்தால் இப்போதைய நிலை மையில் பெரிய சிக்கல்கள் உருவாகி யிருக்கும் என்பதே உண்மை.

ஏனென்றால் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இந்த கணக்குகளில் போடப்பட்டுள்ள டெபாசிட் ரூ. 64,250 கோடியாக அதிகரித்துள்ளது.

ஒரு திட்டத்தை ஆராவாரமாக தொடங்குவது மட்டுமல்ல, அதன் இறுதி பயன் வரை கண்காணிப்பதும் தனது கடமை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்