போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்த இந்தியா..!

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்த இந்தியா..!
Advertisement
Advertisement

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட விமானக் குழுவுடன் போயிங் 737 மேக்ஸ் விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புறப்பட்டது.

விமானம் மேலே எழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிரபாரதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். அந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்தனர்.

இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் தயாரித்தது.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமான இது உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், இந்த விமான விபத்துக்குப் பின்னர் பல்வேறு நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க தடை விதித்தது.

சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஐரோப்பியக் கண்டம் எனப் பல நாடுகள் தடை வித்துள்ள நிலையில் இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் பறக்க தடை விதித்துள்ளது.

பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானங்களில் முறையான மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்தத் தடை தொடரும்.

பயணிகளின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். உலக நாடுகள், ஏர்லைன்ஸ் மற்றும் விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடம் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக விவாதித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த இரு நிறுவனங்களும் சுமார் 18 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை வாங்கியுள்ளது. அவற்றில் 13 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.