அச்சமின்றி

0
378
அச்சமின்றி
Advertisement
Advertisement

டிரிப்பிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வி. வினோத் குமார் தயாரிக்க, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக் கனி, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில்

கதை திரைக்கதை எழுதி பி.ராஜபாண்டி இயக்கி இருக்கும் படம் அச்சமின்றி . என்னமோ நடக்குது வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் – நடிகர் – இயக்குனர் குழு இது .

அது சரி, இந்த படத்துக்கு ரசிகன் அச்சமின்றி போனால் நஷ்டமின்றி வர முடியுமா ? பார்க்கலாம் .

பொதுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே அவுட் செய்து மாணவர்களுக்கு கொடுத்து , சட்டத்துக்குப் புறம்பாக சென்டம் ரிசல்ட் அடிக்க முயலும் தனியார் பள்ளியினை,

சட்டத்தின் முன் நிறுத்த முயன்ற கலெக்டர் அருண்குமார் (தலைவாசல் விஜய்) ஒரு வழி பண்ணப்படுகிறார் .

அதே பகுதியில் ஒரு குழுவோடு (சண்முக சுந்தரம் , கருணாஸ், தேவ தர்ஷினி , ) பிக்பாக்கெட் அடித்துக் கொண்டிருக்கும் சக்திக்கு (விஜய் வசந்த்),

acha-11

படித்த அப்பாவிப் பெண்ணான மலர்(சிருஷ்டி டாங்கே)  மீது காதல் வாசம்,

போலீஸ் ஸ்டேஷனிலேயே  காவலர்களோடு சேர்ந்தே மூணு சீட்டு ஆடும் அளவுக்கு அளவுக்கு சக்திக்கு செல்வாக்கும் சக்தியும் உண்டு .

ஸ்டேஷனுக்கு புதுசாக வரும் போலீஸ் அதிகாரி சத்யா (சமுத்திரக்கனி), முந்தைய அதிகாரியைப் போல இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்கிறார் .

ஒரு நிலையில் தான் காதலித்த பெண்ணும் பேச்சு மாற்றுத் திறனாளியுமான ஸ்ருதியை (வித்யா) சந்திக்கிறார் சத்யா . ஸ்ருதியின் வாழ்வில் பெரும் சோகம் !

ஸ்ருதியின் தம்பி  அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறான்

 கல்வி அம்மா என்று அழைக்கப்படும் அளவுக்கு பலப் பல கல்வி நிறுவனங்களை வைத்து இருப்பவரும் ஐயாயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்டவருமான  ராஜலட்சுமிக்கு ( சரண்யா பொன்வண்ணன் )

acha-2

சொந்தமான தனியார் பள்ளி  ஒன்று, பிளஸ் டூவில் தங்கள் பள்ளி ஸ்டேட் ஃபர்ஸ்ட்  வாங்க வேண்டும் , அதன் மூலம் மேலும் மார்க்கெட் நிலவரத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு  ,

சொந்த செலவில் படிக்க வைப்பதாகச் சொல்லி  ஸ்ருதியின் தம்பி யை அழைத்துச் செல்கிறது .

ஹாஸ்டலிலேயே தங்கி படிக்கச் சென்ற அந்த மாணவன் பிணமாக வீடு திரும்புகிறான் .  அந்த அதிர்ச்சியில் அப்பா அம்மாவும் இறந்து போக, சுருதி தனி ஆளானது சக்திக்கு தெரிய வருகிறது .

கல்வி அமைச்சர் கரிகாலன் (டத்தோ ராதாரவி) முன்பே கால் மேல் கால் போட்டு அமரும் அளவுக்கு ராஜலசுமிக்கு செலவாக்கு இருப்பதும் உணர்த்தப்படுகிறது .

ஸ்ருதியும் சத்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் நிலையில் ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது

மலருக்கு தெரிந்த  ஏழைச் சிறுமி தேவி , அரசுப் பள்ளியில் படித்தாலும் மாநிலத்தில் முதல் இடத்துக்கு வரும் அளவுக்கு தேர்வு எழுதி இருந்தும் அவளது மதிப்பெண் குறைகிறது .

acha-33

விரக்தியில் அவள் தற்கொலைக்கு முயன்று உடல் நலம் பாதிக்கப்பட, தேவிக்காக மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மலர்மீது  ஒரு கும்பல் உயிர்த் தாக்குதல் நடத்துகிறது .

பிரபல ரவுடி ஒருவனின் பர்சை சக்தி பிக்பாக்கெட் அடிக்க, ‘அதில் உள்ள பணம் போனாலும் பரவாயில்லை அந்த பர்ஸ் வேண்டும்’ என்று ரவுடி கும்பல் சக்தியை துரத்துகிறது .

சக்தியிடம் பர்ஸ் இல்லாத நிலையில் அவனை கொலை செய்ய முயல்கிறது . இதே நேரம் போலீஸ் அதிகாரி சத்யாவை துரோகத்தின் வழியே தீர்த்துக் கட்ட ஒரு வியூகம் வகுக்கப்படுகிறது

இந்த எல்லாப் புள்ளிகளும் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பதே இந்த அச்சமின்றி .

இதுவரையிலான கதையைப் படித்த போதே புரிந்திருக்கும் , இவ்வளவு அடத்தியான ஒரு கதை திரைக்கதை தமிழில் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்பது .

acha-6

அதை சும்மா பொழுது போக்கான விஷயமாக மட்டும் வைக்காமல், நமது கல்விக் கொள்கையை கல்விக் கொள்ளையை பிரித்து மேயும் படமாக சொன்ன திறம் ….

வினாத்தாள் அவுட் செய்வது முதற்கொண்டு நன்றாகப் படக்கும் மாணவரின் தேர்வு விடைத்தாளை வேறு நபருக்கு மாற்றி வைத்து , சரியான மாணவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வரை,

கல்வித் துறையில் அத்தனை களங்களிலும் தளங்களிலும் நடக்கும் அடாவடி , ஊழல் , அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை புட்டு புட்டு வைக்கும் தரம் ….

இவற்றில் , நிஜமாகவே அச்சமின்றி நிற்கிறது,  அச்சமின்றி !

”லைட்ஸ் , கேமரா ஸ்டார்ட் சவுண்ட் ஆக்ஷன்” என்று ஆரம்பித்த கணமே கதைக்குள் நேரடியாக நுழையும் அந்த இடத்திலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் திரைக்கதையாளர் இயக்குனர் ராஜ பாண்டி .

acha-5

பிக்பாக்கெட் போலீஸ் உறவு, உட்பட சீரியஸ், காமெடி , கேஷுவல் என்று எல்லா வகையிலும் அடுத்தடுத்த திருப்பங்கள் மிக வேகமாக ரசிகனை படத்தோடு ஒன்றச் செய்கின்றன .

ஒரு நிலைவரை ஜாலியாக போகும் படம் மெல்ல மெல்ல சூடு பிடித்து பரபரப்பு அடைந்து பறக்கிறது .

சக்தியை துரத்தும் நிகழ்வு, மலரை துரத்தும் படபடப்பு, , சத்யாவுக்கு வரும் ஆபத்து … இந்த  மூன்றையும் தெளிவாக தெறிப்பாக பரபரப்பாக விறுவிறுப்பாக சொன்ன விதத்தில்

திரைக்கதையும் இயக்கமும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன .

படத்தை எந்த அளவுக்கு காமெடியாக சொல்ல வேண்டும் .எந்த அளவுக்கு ஆக்ஷனில் போக வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டுக் கொண்டு போன முறையில்  செய்நேர்த்தி !

அப்படி வேகமாகக் கொண்டு வந்து சரியாக சமயத்தில் கனமான கதைப் பகுதியோடு இணைத்து அசத்துகிறார்கள்

acha-4

இதில் எதிர்பாராத காமெடி ரகளை,  கரகாட்டக்காரன் படத்தில் சண்முக சுந்தரம் பேசிய வசனங்களை போன்ற வசனங்களை  அவரை விட்டே பேச வைத்து தியேட்டரை கலகலக்க வைப்பது .

இந்த கேரக்டரை இன்னும் கூட நீட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது

போலீஸ் அதிகாரி சத்யா காப்பாற்றப்படும் விதம் திரைகதையின் இமயம் என்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதன் உச்சம் .

கதைக்கு  உள்ளே நீறு பூத்த் நெருப்பாக இருந்து,  திடீரென்று வெளியே இருந்து உள்ளே நுழைவது போல நடக்கும் அந்த விஷயம்,   மிகப் பொருத்தமான செதுக்கலான காட்சி  …

அடடா ! இப்படி ஒரு  அழகான கிளைமாக்ஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .

அதற்கு முன்பு ஒரு வேளை இது பேய்ப் படமோ என்ற  ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் டைரக்ஷன் உத்தியும்  அபாரம் .

acha-22

அதை விடவும் முக்கயமான விஷயம் அதுவரை படம் படம் முழுக்க ஆக்கிரமித்த கதாபாத்திரங்களை எல்லாம் ஓர் ஓரமாக உட்காரவைத்து ,

விட்டு முழுக்க முழுக்க  சப்ஜெக்டை மட்டுமே வைத்து கோர்ட் சீனில் படத்தை செலுத்தும் இடத்தில்  டைரக்டரின்  கம்பீரம் ஜொலிக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தபோதுதான் ஏற்பட்ட இன்ஸ்பிரேஷனில்தான்  சமுத்திரக்கனிக்கு தனது அப்பா படத்தின் கதைக் கரு தோன்றி இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு படத்தில் பல காட்சிகள் .

அந்த கோர்ட் சீன் அவ்வளவு சிறப்பாக வந்திருப்பதற்கு ஜி. ராதாகிருஷ்ணனின் வசனமும் மிக முக்கியமான காரணம் .

கல்வி கசடான காரணத்தின் வேர்களை தேடிப் பிடித்து விவரிக்கிறது வசனம் . நிறைய உழைத்து இருக்கிறார் ராதா கிருஷ்ணன் .

acha-7

தவிர படம் முழுக்கவே வசனம் சிறப்பு . தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதம் பெரும் சிறப்பு

நினைத்து இருந்தால் அந்தக் கோர்ட் காட்சியில் யாரவது ஒரு தரப்பை குற்றவாளியாக்கி சென்ஷேஷனலைக் கூட்டி இருக்கலாம் .

ஆனால் அப்படி செய்யாமல் பிரச்னையை  அக்கறையோடு பேசும் விதத்தில் வெளிப்பட்டு இருக்கும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவின் படைப்பு நேர்மை பாராட்டுக்குரியது

சக்தி கேரக்டரில் மிக சிறப்பாக ரசிக்கும்படி  நடித்துள்ளார் விஜய் வசந்த் . அவரது கெட்டப் கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம்.  முக பாவங்களில் நல்ல முன்னேற்றம் .

சண்டைக் காட்சிகளில் அந்த முறுக்கிய மீசையும் கூரிய பார்வையும் செம செம … இதுவரை அவர் நடித்த படங்களில் இந்தப் படத்தில்தான் அவரது நடிப்பு பெஸ்ட் .

சமுத்திரக் கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார் .

acha-77

இதுவரை செய்யாத ஒரு கேரக்டரில் கவனிக்க வைக்கிறார் சரண்யா பொன்வண்ணன் . அழகுக்கு சிருஷ்டி . பரிதாபத்துக்கு வித்யா . கெத்துக்கு ராதா ரவி

கணேஷ் குமாரின் சண்டைக் காட்சிகள் அபாரம் . சேசிங் காட்சிகளில்  பாராட்டு பெறுகிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்  பாடல் வரிகளில்  கவனம் கவர்கிறார் யுக பாரதி பிரேம்ஜி அமரனின் இசை ஜஸ்ட் ஒகே

சத்யாவுக்கு சுருதி நிறைய மெசேஜ் செய்திருப்பதாக சத்யாவே சொல்கிறார் . அந்த மெசேஜில் இருந்தது என்ன ? அல்லது தன் நிலைபற்றி மெசேஜில் ஏன் சுருதி சொல்லவில்லை.

சொல்லி இருந்தார் எனில் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு என்று சத்யா புரியாமல் குழ்மபுவது ஏன் ?

சக்தி– மலர், சத்யா- ஸ்ருதி காதல் வளர்க்கும் அந்த பாடல் படத்தின் வேகத்தை சற்று குறைக்கிறது . கல்யாண வீட்டில் கருணாஸ் காமெடி என்று வரும் அந்த சீன்  தேவையே இல்லை

கல்வி அமைச்சர் என்ற கேரக்டரை ஒரு லெவலுக்கு மேல் தாக்கினால் சென்சார் பிரச்னை வரலாம்தான்  . ஆனால் அவரை இவ்வளவு நல்லவராக காட்ட வேண்டிய அவசியம் . அதனால் திரைக்கதைக்கு என்ன பலன் ?

acha-3

இப்படி ஓரிரு சின்னச் சின்ன குறைகள் உண்டு

ஆனால் அதெல்லாம் பெரிய விசயமே  இல்லை என்ற அளவுக்கு ,

நாட்டுக்கு , மாணவ சமுதாயத்துக்கு , பெற்றோருக்கு , தனியார் பள்ளிகளுக்கு , அரசுப் பள்ளிகளுக்கு  அரசுக்கு … இப்ப பல தரப்புக்கும் தேவையான ஓர் அற்புதமான கதையை எடுத்துக் கொண்டு

அதை பரபரப்பு , விறுவிறுப்பு, காதல் , காமெடி, ஆக்ஷன், நெகிழ்வு , கருத்தாழம் எல்லாம் கலந்து சொன்ன வகையில்

அச்சமின்றி …..   உச்சம் தொடுகிறது .

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–

ராஜ பாண்டி, ராதா கிருஷ்ணன் , யுக பாரதி—-