திருச்சியில் திரண்ட திமுக தோழமைகள்..!

திருச்சியில் திரண்ட திமுக தோழமைகள்..!
Advertisement
Advertisement

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக இன்று தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது.

இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் நேற்று கூடிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் இது தொடர்பாக தமிழக அரசு கொந்தளித்தது.

முன்னதாக கடந்த 29-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து டிசம்பர் 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வைகோ பேசுகையில்,

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரதமர் மோடி செய்யும் நல்லவை எது என்பதை ரஜினி விளக்கம் வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் மோடியின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என தமிழக அரசு அமைதி காக்கிறது என்றார்.

அதுபோல் முத்தரசன் கூறுகையில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்றார்.

திமுகவிற்குள் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.