தலைமை செயலகத்தில் விதிகள் மீறப்படுவதாக திமுக புகார்..!

தலைமை செயலகத்தில் விதிகள் மீறப்படுவதாக திமுக புகார்..!
Advertisement
Advertisement

சட்ட விதிமுறைகளுக்கு மாறாக அரசின் தலைமைச் செயலகத்தை கட்சிப் பணிகளுக்காக பயன்படுத்திய,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர் அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை அரசு பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.

தலைமைச் செயலாளரின் கீழ் அனைத்து துறைகளும் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்ட விதிகளுக்கு எதிராகவும், அரசியல் சட்டத்தின்படி தான் பதவி ஏற்கும்போது எடுத்த பதவிப்பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதிமுக கட்சி பணிகளுக்காக நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தை முதல்வர் பழனிசாமி பயன்படுத்தி இருக்கிறார்.

இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் துணை போயிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் எம்.பி. யான கே.சி. பழனிச்சாமியை, தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.

இந்நிகழ்வில் தமிழக அரசின் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் கலந்து கொண்டு சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

எனவே, தமிழக ஆளுநர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் மற்றும்

தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .