மேகமலை இயற்கையின் வரம்…!

54
1355
மேகமலை இயற்கையின் வரம்…!
Advertisement

மேகமலை இயற்கையின் வரம்…!

Advertisement

தேனியில் சுற்றுலா தளங்களுக்கு பஞ்சமே இல்லை… எப்போதும் குளிர்ந்த வானிலை.. மலைகளின் அழகு என்று பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இடம் பிடிக்கும்…

அந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இடம் எது என்று பார்த்தால் பெரும்பாலானோரின் விருப்பம் மேக மலையாக தான் இருக்கும்……

மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும்.

இது தமிழ்நாட்டில் உள்ள மலை வாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது.

                          

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

எங்கே இருக்கிறது?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இந்த நகரம் உள்ளது. சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப் பாதைவழியாகதான் செல்ல முடியும்.

மலைப் பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தேயிலை தோட்டங்கள்…

சின்னமனூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேகமலை. பேருந்தில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம்.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வசதி உண்டு. கட்டணம் சுமார் 20 ரூபாய்.

காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

மலை அடிவாரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் அருகே,

மலை மேல் போகிற வாகனங்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். இவர்களில் வயதான மூதாட்டிகளும் உண்டு.

ஆரத்தி காட்டுபவர்களுக்கு தட்டில் காணிக்கை செலுத்தி விட்டு மலை மேல் ஏற ஆரம்பிக்கலாம்.

போகப் போக சாலை 20 அடியாகக் குறுகி போகிறது. அதனால், பேருந்துகள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன.

உயரே செல்ல செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசயிக்கவும் ஆச்சர்யப்படவும் அச்சப்படவும் வைப்பதுதான் வனத்தின் அழகு.

                                

காட்டுக் கோழிகள், சேவல்களை அதிகம் பார்க்கலாம். சிங்க வால் குரங்குகளுக்கும் பஞ்சமில்லை.

பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர், குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. ஹைவேவிஸ் -ல் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது.

ஹோட்டலில் சைவம் மற்றும் அசைவம் சாப்பாடு கிடைக்கிறது. அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் என்கிற மீன் பொரியல் கிடைக்கும்.

அடுத்து மகாராஜா மெட்டு என்கிற இடம் வருகிறது. இதுவும் கரடுமுரடான சாலையை கொண்டதுதான்.

இருபுறமும் கண்ணுக்கு குளுமையாக தேயிலைத் தோட்டங்கள், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என பல இடங்கள் இருக்கின்றன.

அணைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது.

இரண்டு மலைகளுக்கு இடையே பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை தெளிவு.

சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மேகமலையை அடையலாம். பகல் நேர வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ்.

அதனால்தான் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகலில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். வழியில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன.

எல்லாப் பருவ நிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள். இயற்கையின் ரசிகர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது.

நன்றி- தேனியின் சாரல்