நடிகை பாவனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

45
605
Advertisement
Advertisement

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை படக்குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

பாலியல் தொல்லை

மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல நடிகை பாவனா, கடந்த 17–ந்தேதி மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திருச்சூரில் இருந்து இரவில் வீடு திரும்பினார்.

வழியில் அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், பாவனாவை காருடன் கடத்திச்சென்றனர்.

பின்னர் ஓடும் காரிலேயே அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அந்த கொடூர சம்பவத்தை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அந்த கும்பல் பின்னர் கொச்சி அருகே அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.

9 நாள் போலீஸ் காவல்

கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மற்றும் 3 பேரை போலீசார் உடனே கைது செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான ‘பல்சர் சுனி’ என்ற சுனில் குமாரும், அவரது கூட்டாளி விஜீஷ் என்பவரும் கடந்த 23–ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் 9 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு ஆலுவா கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இந்த கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களின் செல்போன் மற்றும் ‘சிம்’ கார்டுகளை கைப்பற்றி விசாரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர்.

கைதட்டி வரவேற்பு

கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பவத்தால் கடும் அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலில் இருந்த நடிகை பாவனா, தனது தோழியும், பிரபல நடிகையுமான ரம்யா நம்பீசனின் வீட்டில் தங்கி இருந்தார்.

அங்கு இருந்தவாறே மருத்துவ பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணைகளில் கலந்துகொண்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த பாவனா, நேற்று புதிய மலையாளப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

பிரித்வி ராஜ் நடிக்கும் ‘ஆதாம்’ என்ற அந்த படத்தின் படப்பிடிப்பு கொச்சி துறைமுகத்தில் நடந்தது.

இந்த சோக சம்பவத்துக்குப்பின் முதல் முறையாக படப்பிடிப்புக்கு வந்த அவரை பிரித்வி ராஜ் மற்றும் படக்குழுவினர் கைதட்டி வரவேற்றனர்.

மலையாள திரையுலகம் பாராட்டு

இந்த கடினமான நேரத்திலும் வியக்கத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பாவனாவை பாராட்டுவதாக நடிகர் பிரித்வி ராஜ் கூறினார்.

மேலும் தான் முந்தைய படங்களில் வில்லனாக நடித்த போது பெண்களுக்கு எதிரான கருத்துகளை பேசி நடித்ததற்காகவும், அவர்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளில் நடித்ததற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறிய அவர், அத்தகைய வேடங்களில் இனிமேல் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

பாவனா மன உறுதியுடன் ஒரே வாரத்தில் மீண்டும் நடிக்க வந்ததற்காக மலையாள திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.