அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா..!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா..!
Advertisement
Advertisement

திருப்பூர், கோவை, ஈரோடு என 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டுக்கால முக்கியக் கோரிக்கையான,

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதனால் அவிநாசி முழுவதும் திருவிழா உற்சாகத்தில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது அத்திக்கடவு – அவிநாசி திட்டம்.

இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி கடந்த 60 ஆண்டு காலமாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை கட்டமைத்துப் போராடி வந்தார்கள் பொதுமக்கள்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டப் போராட்டக் குழு என்ற பெயரில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து அரங்கேற்றி வந்த நிலையில்,

கடந்த ஆட்சியின்போது அத்திக்கடவு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்திருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

இருப்பினும் திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு இருந்ததால், அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற வகையில் கடந்தாண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்தினார்கள் மக்கள்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு அத்திக்கடவு திட்டம் தொடர்பாகப் பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது.

பின்னர் திட்டத்தில் பல மாற்றங்களையும் கொண்டுவந்து, இறுதியாக ஈரோடு அருகே காளிங்கராயன் கால்வாயிலிருந்து குழாய் மூலமாக பல்வேறு குளங்கள் மற்றும் குட்டைகளில் நீரை நிரப்பும் வகையில் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதுபற்றிய அறிவிப்பை திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பின்னர் அத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, ரூபாய் 1652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக அதற்கான அரசு நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.

இந்தநிலையில் இன்றைய தினம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அவிநாசியில் நடைபெற இருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திட்டத்துக்கான அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

அதேபோல 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூர் மாநகருக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.