ஈஷா விவசாய இயக்கம் சார்பில் 9 நாள் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு..!

0
102
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் 9 நாள் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு..!
Advertisement
Advertisement

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் பிப்.2-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை,

பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் அவர்களின் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000 விவசாயிகள்பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில்  நடைபெற்றது.

இதில் வேளாண் வல்லுநர் திரு.சுபாஷ் பாலேக்கர், ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் இயக்குநர் திரு.ஆனந்த்,

ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, முன்னோடி இயற்கை விவசாயி திரு.வள்ளுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேளாண் வல்லுநர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஈஷா அறக்கட்டளை ஒரு ஆன்மிக அமைப்பாக இருந்தாலும் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் தன்னலமற்ற சேவை புரிந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு 8 நாட்கள் பல்லடத்தில் ஜூரோ பட்ஜெட் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் நான் பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தேன்.

அதேபோல், இந்தாண்டு பிப்.2-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை 9 நாட்கள் திருச்சியில் என்னுடைய வழிமுறைப்படி விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் சுமார் 50 லட்சம் விவசாயிகள் என்னுடைய விவசாய வழிமுறைகளை பின்பற்றி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

இதன்மூலம், அவர்களுடைய வாழ்வாதாரம் நன்கு மேம்பட்டுள்ளது.

ரசாயன விவசாயத்தில் விளைவிக்கப்படும் விளைப்பொருட்களுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய விளைப்பொருட்களுக்கு 2 மடங்கு கூடுதல் விலை கிடைக்கிறது.

மகசூலும் அதிகமாக கிடைக்கிறது. உற்பத்தி செலவு குறைகிறது.

எனவே, இந்த லாபகரமான இயற்கை விவசாய வழிமுறைகளை தமிழக விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கு,

ஈஷா நடத்தும் பயிற்சி வகுப்பு சிறப்பு வாய்ப்பாக அமையும். இவ்வாறு சுபாஷ் பாலேக்கர் பேசினார்.

ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் இயக்குநர் திரு.ஆனந்த் பேசியதாவது:

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் ஈஷா விவசாய இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்துள்ளோம்.

அதன் அடுத்தக்கட்டமாக, திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் பிப்ரவரி மாதம் திரு.சுபாஷ் பாலேக்கரின் மாபெரும் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பை நடத்த உள்ளோம்.

தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் பங்கேற்கும் வகையில் இந்நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளோம்.

அந்த 9 நாட்களும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உணவு மற்றும்

தங்கிமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். ரசாயன விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு இந்த பயிற்சி அடித்தளமாக இருக்கும்.

அந்த பயிற்சியில் ரசாயன விவசாயத்துக்கும் இயற்கை விவசாயத்துக்கும் உள்ள வித்தியாசங்கள்,

இயற்கை விவசாயத்தின் நன்மைகள், இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பு, ஊடுப்பயிர் செய்வது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து முழுமையாக சொல்லி கொடுக்கப்படும்.

அதற்கு முன்னதாக, ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு பல்லடத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று,

இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்து வரும் சுமார் 500 விவசாயிகளுடன் திரு.சுபாஷ் பாலேக்கர் ஐயா ஜன.5 மற்றும் 6-ம் தேதி கலந்துரையாட உள்ளார்.

இந்நிகழ்ச்சி பல்லடம் விக்னேஷ் மஹாலில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சவால்கள்,

விளைப்பொருட்கள் விற்பனையில் உள்ள பிரச்சினைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சுபாஷ் பாலேக்கர் அவர்கள் பேச உள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவசாயிகளை இயற்கை விவசாய
பயிற்சியாளர்களாக மாற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பயிற்சி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 8300093777, 9442590077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு திரு.ஆனந்த் கூறினார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119