நீயா..? நானா…? செங்..கோவுக்கு…. அ.மணி…சவால்…..!!

38
733
சவாலுக்கு ரெடியாகி நாள் குறித்த அன்புமணி..!
Advertisement

நீயா..? நானா…? செங்..கோவுக்கு…. அ.மணி…சவால்…..!!

Advertisement

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள், விவாதத்திற்கான இடம், தேதியை செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள்,

அது குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

அவரது துணிச்சலை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான்.

அதனால் தான் அத்துறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் கூட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவசக் கல்வி உள்ளிட்ட ஏராளமானத் திட்டங்களை பா.ம.க. அறிவித்திருந்தது.

ஆனால், 2011&ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் பயனாக அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த நண்பர் செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதைவிட முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக நேர்மையான அதிகாரியான உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

உதயச்சந்திரனின் நியமனத்திற்குப் பிறகு தான் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டவை  என்பதால் அதற்காக அவருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் பா.ம.க. மனப்பூர்வமாக பாராட்டு தெரிவித்தது.

இத்தகைய சீர்திருத்தங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த ஒத்துழைப்பையும் வரவேற்றோம்.

ஆனால், அனைத்துமே ஆரம்ப ஜோர் என்பதைப் போன்று  தொடக்கத்தில் சில மாதங்கள் நேர்மையாக செயல்பட்ட பள்ளிக்கல்வித்துறை

அதன்பிறகு ஊழல் சேற்றில் புரளத் தொடங்கி விட்டது என்பது தான் வேதனை. இதற்கு செங்கோட்டையன் தான் பொறுப்பு.

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்,

150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன.

காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டதா..?

இதையடுத்து இப்பள்ளிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், என 1900 பணியிடங்கள்,

ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் 900 தலைமையாசிரியர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 150 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் என,

2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி தானே நிரப்பியிருக்க வேண்டும்?

அதைவிடுத்து கலந்தாய்வு நடத்தாமல் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் ஆளுங்கட்சியினரும்,

அமைச்சர் செங்கோட்டையன் கைகாட்டியவர்களுக்கும் இடமாற்ற ஆணை வழங்கியது விதிமீறலா… இல்லையா?

இதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தாரா… இல்லையா? 

 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் மட்டும் தான்   ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அதிகாரம் இருந்த நிலையில்,

அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டதா…. இல்லையா?

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத் தன்மை எள்ளளவாவது கடைபிடிக்கப்பட்டதா? என்பதை வெளிப்படைத்தன்மையின் அடையாளமாக திகழும் செங்கோட்டையன் கூற வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றி அண்மைக்காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாற்றுகளையும் மறுஉறுதி செய்கிறேன்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

விவாதத்தை மக்கள் நேரடியாக பார்த்து மதிப்பீடு செய்துகொள்ள வசதியாக விவாதம் செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது நிபந்தனையாகும்.

இதை ஏற்றுக் கொண்டு விவாதம் நடத்துவதற்கான இடம் மற்றும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தால்,

அந்த தேதியில் அவருடன் விவாதம் நடத்த நான் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119