பீகாரில் ரயில் தடம்புரண்டது: 7 பேர் பலி..!

பீகாரில் ரயில் தடம்புரண்டது: 7 பேர் பலி..!
Advertisement
Advertisement

பீகார் மாநிலம் வைஷாலி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

பீகாரில் வைஷாலி அருகே சஹதாய் பஜர்க் என்ற இடத்தில் சீமான்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இச்சம்பவம் அதிகாலை 3.52 மணிஅளவில் நடந்துள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விபத்தில் 7 பேர் வரையில் பலியாகி உள்ளதாகவும், 13 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும், மீட்பு பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் நிதியுதவியை அறிவித்து உள்ளது.

உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்ள உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் பொது மக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரயில்வே மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவத்திற்கு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுலும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.