அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம் உண்மையா..?

30
687
அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம் உண்மையா..?
Advertisement

அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம் உண்மையா..?

Advertisement

பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி நாடு முழுவதும் தந்தியைப் போல் வேகமாக பரவி வருகிறது.

உண்மையில் அரிசியில் பிளாஸ்டிக் கலக்கிறார்களா? அல்லது பிளாஸ்டிக்-கை மூலப்பொருளாகக் கொண்டு அரிசியை தயார் செய்கிறார்களா?

இப்படி ஒரு செய்தி எப்படி பரவுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலப்படத்தின் அடிப்படையே விலை குறைவான பொருளை, விலை அதிகமான பொருளில் கலந்து விற்பதன் மூலம் கொள்ளை லாபமடிப்பது என்பது தான்.

பொதுவாக மிளகில் பப்பாளி விதையை கலந்து விற்பது, டீத்தூளில் புளியங்கொட்டை பொடி கலந்து விற்பது, அரிசியில் கல், உமி கலந்து விற்பது என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம்.

மிளகு கிலோ 800 ரூபாய், பப்பாளி விதை கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் கலப்படம் செய்பவருக்கு லாபம்.

டீத்தூள் 700 ரூபாய். புளியங்கொட்டை கிலோ 20 ரூபாய், கலப்படம் செய்தால் கொள்ளையோ கொள்ளை லாபம், அரிசியில் கல்லை கலப்பதன் மூலம் எடையைக் கூட்டலாம்.

இப்போது அரிசியின் விலை கிலோ 50 ரூபாய். வெள்ளை பிளாஸ்டிக்கின் விலை கிலோ 120 முதல் 140 ரூபாய் விற்கப்படுகிறது.

140 ரூபாய் போட்டு 1 கிலோ பிளாஸ்டிக்கை வாங்கி அதை அரிசி போல் தூளாக்க மேல் செலவு செய்து கிலோ 50 ரூபாய் என்று அரிசியில் கலந்து விற்பார்களா?

அடிமுட்டாள் வியாபாரி கூட இந்த மாதிரி ஒரு வியாபாரத்தை செய்யமாட்டான்.

அப்படியே அயோக்கியர்கள் யாராவது மக்கள் உடல்நலம் கெட்டு நாசமாய்ப் போகட்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு,

பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்தால் அரிசியை வாயில் போட்டு கடித்த உடனேயே தெரிந்துவிடும்.

இது அரிசியில்லையென்று. எனவே, பிளாஸ்டிக்கில் அரிசி என்பதற்கு வாய்ப்பே இல்லை.

வேறு எப்படி? மைசூர் பாகு இனிப்பில் எப்படி மைசூர் இருக்காதோ, திருநெல்வேலி அல்வாவில் எப்படி திருநெல்வேலி இருக்காதோ அதே போல் பிளாஸ்டிக் அரிசியில் பிளாஸ்டிக் இருக்காது.

ஆனால், மக்கள் அதனை பிளாஸ்டிக் அரிசி என்று சொல்கிறார்கள். கடினமானது, கடிக்க முடியாதது என்றால் அதை பிளாஸ்டிக் பட்டியலில் வைத்து விடுகிறார்கள் போலும்.

மக்கள் உடல்நலனைப் பற்றி கவலைப்படாத கொள்ளை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சில சமூகவிரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள்.

அரிசி குருணையை அல்லது ஜவ்வரிசி குருணையை அரைத்து அதனுடன் மரவள்ளி,

சர்க்கரைவள்ளி கிழக்கு மாவை சேர்த்து கூழாக்கி போரிக் அமிலம் என்ற ரசாயனத்தை சேர்த்து கலக்கி காயவைத்து விடுகின்றனர்.

பிறகு மிசினில் கொடுத்து அரிசியை போல் சிறு துண்டுகளாக்கி அரிசியில் கலந்து விடுகின்றனர்.

ஒரு கிலோ மரவள்ளி 5 ரூபாய் தான். சர்க்கரைவள்ளிக் கிழங்கு 10 ரூபாய்க்குள் தான். குருணை உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்தாலும் உற்பத்தி செலவு 15 ரூபாய்க்கு மேல் போகாது.

ஆனால் கிலோ 50 ரூபாய் என விற்கும் அரிசியில் கலந்து விற்கும் போது பெரும் லாபம் ஈட்ட முடியும்.

எனவே, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை என தோள்தட்டுவதற்கு பதிலாக, மேற்கண்டவாறு மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து,

தொழிற்சாலைகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்பது தான் அரசின் முதன்மையான வேலை,

“நெருப்பில்லாமல் புகையாது” என்று பழமொழி உண்டு. அந்த நெருப்பை கண்டறிந்து அரசு அணைக்க வேண்டும்.

காலங்காலமாக அரிசியை மட்டுமே உணவாக உட்கொள்ளும் மக்களுக்கு அரிசிக்கும், அரிசி அல்லாத மற்ற வெள்ளையான அரிசியைப் போன்ற பொருளுக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?

பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் அரிசியைப் போன்ற ஒரு கலப்படப் பொருள் அரிசியில் கலந்து விற்கப்படுகிறது என்பதும் உண்மை.

சோற்றுக் கஞ்சி பசை போல் இருப்பதிலிருந்து இதை கண்டறியலாம். ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஜவ்வரிசி கஞ்சியை போல் அரிசி கஞ்சி இருப்பதால் அதில் மேற்சொன்னபடி கலப்பட அரிசி தான்.

எனவே, தமிழக அரசு ஊழல் அதிகாரி களை ஓரங்கட்டி நேர்மையான அதிகாரிகள் மூலம் தீவிர சோதனை செய்வதன் மூலம்

“அரிசியில் கலப்படம்” என்பதை முற்றாக ஒழிக்க முன்வர வேண்டும்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119