2018-ம் ஆண்டு துலாம் ராசிக்கானபலன்கள்

துலாம் ராசிக்கான தெய்வம் : லட்சுமி

0
379
tula-rasi
Advertisement

சித்திரை 3,4ம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்

Advertisement

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட்டாமல் வாழும் ஆற்றலும், தன்னுடைய சொந்த கருத்துகளைக் கூட சிந்தித்து வெளிப்படுத்தும் தன்மையும் கொண்ட துலா ராசி நேயர்களே!

உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகனான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் இந்தாண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும்.

போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள்.

வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் கை, கால் வலி சோர்வு போன்றவை உண்டாகும்.

கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். 11.10.2018 முதல் குருபகவான் தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் இறுதியில் சாதகமான பலன்களை அடைய முடியும்.

கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் அமையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட கூடிய ஆற்றல் உண்டாகும்.

குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

சனி பகவான் 3 ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சரியாகும்.

எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்ககூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.

குடும்பம், பொருளாதாரம்

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த வகையிலும் பணநெருக்கடியோ, உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடோ ஏற்படாது. தொட்டதெல்லாம் துலங்கும்.

நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் 11.10.2018 முதல் குரு 2 ல் சஞ்சரிப்பதால் நிறைவேறிவிடும்.

விரோதிகளும் நட்பு கரம் நீட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும்.

கொடுக்கல், வாங்கல்

கொடுக்கல், வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சாதகமான பலனை அடைவீர்கள்.

எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

இந்த ஆண்டு முற்பாதியில் குரு பகவான் ஜென்ம ராசியில் சாதகமின்றி சஞ்சரித்தாலும் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபங்களை பெற முடியும்.

தொழில், வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள்.

தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் உதவிகள் கிட்டும்.

உத்தியோகம்

சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் ராஜ மரியாதை கிடைக்கும்.

உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும் அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடி வரும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும்.

வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அமையும்.

கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும்.

ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அரசியல்

இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி 3 ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள்.

சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும்.

விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும்.

புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்.

உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும்.

அரசு வழியில் கௌரவிக்கப் படுவீர்கள்.

பணம் வரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் பட பிடிப்பிற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவ, மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 5,6,7,8 
நிறம் : வெள்ளை, பச்சை, 
கிழமை : வெள்ளி, புதன், 
கல் : வைரம் 
திசை : தென் கிழக்கு, 
தெய்வம் : லட்சுமி

ஜோதிடர்:- பிரகாஷ் ஜெயராமன்