அஞ்சுக்கு ஒண்ணு

43
1008
அஞ்சுக்கு ஒண்ணு
Advertisement

கதை

Advertisement

நாயகன் அமர், சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி ஒன்றாக கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களுடைய மேஸ்திரி சிங்கம் புலி.

இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள்.

இவர்களுடன் கட்டிட வேலைக்கு நாயகி உமாஸ்ரீ வருகிறாள். சித்தார்த்துக்கு அந்த பெண் மீது காதல் வருகிறது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். 5 நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டதால், நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

இவர்களை ஒன்றுசேர்க்கவும், அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவும் நாயகி முயற்சி செய்கிறாள்.

இந்த முயற்சியில் நாயகிக்கு வெற்றி கிடைத்ததா? நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

விமர்சனம்

சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியின் அன்புக்கும், நண்பர்களின் நட்புக்கும் இடையே சிக்கித் தவிப்பதை பிரதிபலிக்கிறார்.

நாயகி உமாஸ்ரீயை சுற்றி கதை நகர்கிறது. அந்த பாத்திரமாகவே அவர் மாறி இருக்கிறார். 

அமரின் காதலியாகவும், முதலாளியின் மகளாகவும் வரும் மேக்னா கச்சிதம். கட்டிட மேஸ்திரி சிங்கம் புலி, ரசிக்க வைக்கிறார்.

முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா உள்ளிட்ட மற்றவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்வியார்.

அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றி அழகாக்குவது கதைக்கு பலம்.

மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.

காட்சிகள் திருப்பம் இல்லாமல் நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் எதிர்பாராதது. நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் படம் ஐந்தில் ஒன்றாக பேசப்பட்டிருக்கும்.

முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

என்றாலும், கட்டிட கூலி தொழிலாளர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருப்பது புதிய முயற்சி.

சாகித்யா இசையில் பாடல்களை ரசிக்கலாம். பின்னணியும் பரவாயில்லை.

நந்து ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு.

மொத்தத்தில் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ வித்தியாசமான சிந்தனை.